தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தென்ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக திட்டமிட்டு சேதப்படுத்திய விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வசமாக வீடியோ ஆதாரங்களுடன் சிக்கிய பின் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களின் செயலை ஒப்புக்கொண்டனர். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பேன்கிராப்ட் ஆகியோர் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஐசிசி, கேமரூன் பேன்கிராப்ட்டிற்கு 75% அபராதமும், அணி கேப்டனான ஸ்டீவன் ஸ்மித்திற்கு 100% அபராதத்துடன் கூடிய ஒரு டெஸ்டில் விளையாடுவதற்கான தடையையும் விதித்தது.
இந்நிலையில் இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக எதிர்நோக்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதை பற்றி யோசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் தொடங்கப்படவுள்ள ஐபிஎல் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் ராஜஸ்தான் அணி கேப்டனாகவும், ஹைதராபாத் அணி கேப்டனாக டேவிட் வார்னரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் தற்போது பால் டேம்பரிங் (பந்தை சேதப்படுத்துதல்) சர்ச்சையில் சிக்கியுள்ளதால் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் முறையே ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கலாம் என்று கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டாண்டு தடைக்கு பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல்-இல் கலந்துகொள்ள உள்ளதால் ஸ்டீவன் ஸ்மித் அந்த அணிக்கு முக்கியமானவர் தான். அதே வேளையில் ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவருடனான ஒப்பந்தத்தை ராஜஸ்தான் அணி ரத்துசெய்யாது என்றே கருதுகின்றேன்.ராஜஸ்தான் அணி ஸ்டீவன் ஸ்மித் மீது என்ன நடவடிக்கை எடுக்கின்றதோ அதே நடவடிக்கையை ஹைதராபாத் அணியும் பின்பற்றும் என எதிர்பார்க்கலாம் என்றார்.
மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஒருவேளை ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டால் அவருக்கு பதிலாக ரஹேனாவும், ஹைதராபாத் அணியிலிருந்து டேவிட் வார்னர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது என்றார்.