
ஐசிசி-யின் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் நான்கு புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்து வருகிறது. இந்திய அணி இம்முறை சொந்த மண்ணில் விளையாடி வருவதால் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்கிற ஆவலும் இருந்து வருகிறது.
இந்த தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. அந்த வகையில் விசாகப்பட்டினம் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் தற்போது வரை 34 ஓவர்கள் நிறைவடைந்துள்ள வேளையில் இந்திய அணியானது 2 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவித்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களையும், பிரதிகா ராவல் 75 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 66 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் வீராங்கனையாக மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை மந்தனா நிகழ்த்தியுள்ளார். அதாவது மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் 1000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் அடித்த முதல் வீரராக உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : 15 போட்டியில் ஐந்து 5 விக்கெட்ஸ்.. குல்தீப் யாதவ் உலக சாதனை.. இந்தியாவை திருப்பி அடிக்கும் வெ.இ?
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெலிண்டா கிளார்க் என்பவர் 1997 ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் 970 ரன்கள் அடித்ததே இதுவரை அதிகபட்ச ரன்களாக இருந்து வந்த வேளையில் நடப்பு 2025 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் மட்டும் ஸ்மிரிதி மந்தனா 1000 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.