ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை 100+ ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த முதல் அணியாக சாதனை படைத்து வென்றது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி செப்டம்பர் 20ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.
அப்போட்டியில் இந்தியாவை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்றது. அந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 413 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக பெத் மூனி 138 (75), எலிஸ் பெரி 68, ஜார்ஜியா 81 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
சரவெடியாக போராடிய மந்தனா:
அடுத்ததாக விளையாடிய இந்தியா முடிந்தளவு போராடியும் 47 ஓவரில் 369 ரன்கள் மட்டுமே எடுத்துப் போராடி தோற்றது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 125 (63) ரன்கள் விளாசி போராடினார். அவருடன் தீப்தி சர்மா 72, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 52 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீராங்கனைகள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் இந்தியா தோற்றது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிம் கார்த் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இப்போட்டியில் 50 பந்துகளில் 100 ரன்களை அடித்த மந்தனா இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமான சதத்தை அடித்த கிரிக்கெட்டர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்து புதிய சரவெடி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2013 ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 52 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனை.
உலக சாதனை:
அத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது வேகமான சதத்தை அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் மந்தனா படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. மெக் லென்னிங் (ஆஸ்திரேலியா): 45 பந்துகள், நியூஸிலாந்துக்கு எதிராக, 2012
2. ஸ்ம்ரிதி மந்தனா (இந்தியா): 50 பந்துகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2025*
3. கரேன் ரோல்டன் (ஆஸ்திரேலியா): 57 பந்துகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2000
4. பென் மூனி (ஆஸ்திரேலியா): 57 பந்துகள், இந்தியாவுக்கு எதிராக, 2025*
இதையும் படிங்க: 413 ரன்ஸ் சேசிங்கில்.. மிரட்டிய மந்தனா.. உலக சாதனை படைத்து போராடி வீழ்ந்த இந்தியா.. ஆஸி பதிலடி வெற்றி
மேலும் வேகமான (25 பந்துகளில அரை சதத்தை அடித்த இந்திய வீராங்கனை என்ற தனது சொந்த சாதனையை உடைத்த மந்தனா மற்றுமொரு புதிய சாதனை படைத்தார். அது போக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையையும் மந்தனா சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. மெக் லென்னிங் (ஆஸ்திரேலியா): 15
2. சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)/மந்தனா (இந்தியா): தலா 13
3. டம்மி பியூமோண்ட் (இங்கிலாந்து): 12



