பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்து தனது திறமையை வெளிக்காட்டிய கிரக்கெட் வீரர் ஒருத்தருக்கு, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பார்படாஸ் ட்ரைடன்ட்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலமாக அவர், இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதும் தெளிவாக தெரிய வந்திருக்கிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர்தான் ஸ்மித் பட்டேல்.
அந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான உன்முக் சாந்த்துடன் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து, அந்த உலக கோப்பையை இந்தியஅணி கைப்பற்ற மிக முக்கியமான காரணமாகத் திகழ்ந்தார். அந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் அவரை ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. உள்ளூர் தொடர்களில் கோவா, திரிபுரா மற்றும் பரோடா ஆகிய அணிகளுக்காக அவர் விளையாடி வந்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் அவர் பங்கேற்று விளையாடி இருந்தாலும், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவர் அமெரிக்க நாட்டு பிரஜையாக மாற போகிறார் என்ற செய்திகள் சில வாரங்களுக்கு முன்பு உலா வந்தன. இந்நிலையில் கரீபியன் பரீமியர் லீக்கில் பார்படாஸ் அணிக்காக அவர் விளையாடப்போவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் விதிமுறைப்படி, ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்ற பிறகுதான் வெளிநாட்டு உள்ளூர் தொடர்களில் விளையாட முடியும் என்பதால், ஸ்மித் பட்டேல் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க நாட்டு கிரிக்கெட் அணிக்காக அவர் விளையாடப் போகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த நாட்டில் நடைபெற இருக்கும் அமெரிக்கன் சூப்பர் லீக்கில் அவர் பங்கு பெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரீபியன் ப்ரீமியர் லீக்கில், கிறிஸ் மோரிஸ், ஜேசன் ஹோல்டர், முஹம்மது ஆமீர், திசாரா பெரேரா ஆகிய முன்னனி வீரர்கள் அடங்கிய அணியாக பார்படாஸ் ட்ரைடன்ட்ஸ் அணி இருக்கிறது. தற்போது அவர்களுடன் ஸ்மித் பட்டேலும் இணைந்திருக்கிறார். இதுவரை 28 உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 34 என்ற சிறந்த சராசரியுடன் 708 ரன்களை அடித்திருக்கிறார்.