ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையில் அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் 10வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து ஆட்டத்தைத் துவங்கிய இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்து 23 ரன்னில் அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய பிரதிகா ராவல் 37 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். ஆனால் அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 13, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 9 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இந்தியா அசத்தல்:
போதாகுறைக்கு மிடில் ஆர்டரில் ஜெமிமா ரோட்ரிகஸ் 0, தீப்தி சர்மா 4 ரன்களில் அவுட்டானதால் 102/6 என இந்தியா சரிந்தது. அப்போது ரிச்சா கோஸ் நிதானமாக விளையாடினார். அவருடன் இணைந்து விளையாடிய அமன்ஜோத் கௌர் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 35 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய ரிச்சா அரை சதத்தை அடித்தார்.
எதிர்ப்புறம் வந்த ஸ்னே ராணா அதிரடியாக விளையாடினார். அவருடன் இணைந்து நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஸ் 11 பவுண்டரி 4 சிக்சருடன் 94 (77) ரன்கள் குவித்து இந்தியாவை கரை சேர்த்தார். இறுதியில் ராணா 33 ரன்கள் எடுத்த உதவியுடன் 49.5 ஓவரில் இந்தியா 251 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சோலே ட்ரையான் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
மந்தனா உலக சாதனை:
முன்னதாக அப்போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மந்தனா 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 23 (32) ரன்கள் குவித்தார். இதையும் சேர்த்து 2025ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் போட்டிகளில் மந்தனா மொத்தமாக 982* ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் மெலிண்டா கிளார்க் சாதனையை உடைத்த மந்தனா புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ரோஹித் மற்றும் விராட் இந்திய அணியில் நீடிக்க என்ன செய்ய வேண்டும்? – சவுரவ் கங்குலி கருத்து
இதற்கு முன் 1997 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீராங்கனை பெலிண்டா கிளார்க் 970 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தற்போது அந்த 28 வருட உலக சாதனையை இந்தியாவின் மந்தனா உடைத்துள்ளார். விரைவில் இந்திய அணிக்காக அவர் 1000 ரன்கள் அடித்து மற்றொரு சாதனை படைப்பதற்கு பிரகாச வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



