SL vs IRE : தொடரும் ஆசிய சாம்பியனின் வெற்றி நடை – அடுத்த டார்கெட் ஆஸ்திரேலியா தான், நடப்பு சாம்பியன் தப்புமா?

IRE vs SL
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் முதல் சுற்று முடிந்து சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. அதில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற 15வது லீக் போட்டியில் முதல் சுற்றில் போராடி சூப்பர் 12 சுற்றுகள் நுழைந்த அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஹோபார்ட் நகரில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இலங்கையின் தரமான பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 128/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் பலமான ஓப்பனிங் ஜோடியை ஆரம்பத்திலேயே பிரித்து கேப்டன் ஆண்டி பால்பிரினை 1 (5) ரன்னில் அவுட்டாக்கிய இலங்கை மிடில் ஓவர்களில் டூக்கர் 10 (11) குர்ட்டிஸ் கேம்பர் 2 (4) ஜார்ஜ் டாக்ரெல் 14 (16) கெராத் டிலானி 9 (6) என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்தது. அதனால் பெரிய ரன்களைக் குவிக்கும் வாய்ப்பை கோட்டை விட்ட அயர்லாந்துக்கு அதிகபட்சமாக ஹேரி டெக்டர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 45 (42) ரன்களும் தொடக்க வீரர் பால் ஸ்டெர்லிங் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (25) ரன்களும் எடுத்தனர். மறுபுறம் கட்டுக்கோப்பாக பந்து வீசிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக வணிந்து ஹசரங்கா மற்றும் மஹீஸ் தீக்சனா ஆகிய சுழல் பந்து வீச்சு ஜோடி தலா 2 விக்கெட்டுகளை எடுத்து.

- Advertisement -

தொடரும் வெற்றி நடை:
அதை தொடர்ந்து 129 ரன்களை துரத்திய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே அதிரடியை துவக்கிய ஓப்பனிங் ஜோடி 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த போது தொடக்க வீரர் டீ சில்வா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (25) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அட்டகாசமாக செயல்பட்ட தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்து 68* (43) ரன்கள் விளாசினார். அவருடன் பொறுப்பாக பேட்டிங் செய்த சரித் அஸலங்கா தனது பங்கிற்கு 2 பவுண்டரியுடன் 31* (22) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்தார். அதனால் தடுமாறாமல் 15 ஓவரிலேயே 133/1 ரன்கள் குவித்த இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் கச்சிதமான வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்த வெற்றிக்கு 68* ரன்கள் குவித்து பேட்டிங்கில் முக்கிய பங்காற்றிய குஷால் மென்டிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக சமீப காலங்களில் அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் மெகா வீழ்ச்சியைக் கண்டுள்ள இலங்கை கிரிக்கெட் ஐசிசி தர வரிசையில் கீழே சென்றுள்ளது. இருப்பினும் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் முதல் போட்டியில் தோற்றாலும் அதன்பின் கொதித்தெழுந்து இளம் வீரர்களை வைத்து அபாரமாக செயல்பட்ட அந்த அணி ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய வலுவான அணிகளை தோற்கடித்து 6வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது.

- Advertisement -

அதனால் பாராட்டுக்களை அள்ளிய அந்த அணி இந்த உலக கோப்பையில் முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் தோற்று அதிர்ச்சிக்கும் கிண்டல்களுக்கும் உள்ளானது. ஆனா ல்முதல் போட்டியில் தோற்று மீண்டெழுவது தங்களது அணியின் புதிய ஸ்டைல் என இலங்கை ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அதற்கேற்றார் போல் அதற்கடுத்த 2 போட்டிகளில் கொதித்தெழுந்த இலங்கை அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு எம்ஜிஆர் ஸ்டைலில் வந்தது.

தற்போது இந்த சவாலான சூப்பர் 12 சுற்றிலும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்து அயர்லாந்தை அசால்டாக தோற்கடித்துள்ள அந்த அணியின் வெற்றிப் பயணம் தொடர்வது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வெற்றிப் பயணத்தில் இலங்கை அடுத்ததாக அக்டோபர் 25ஆம் தேதியன்று சமீபத்திய டி20 தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து முதல் போட்டியில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க : அவரை கழற்றிவிட்டு இவர வாங்கிடுங்க சிஎஸ்கே, 2 வரலாற்று சாதனை படைத்த இங்கி வீரரை பாராட்டும் சென்னை ரசிகர்கள்

தற்சமயத்தில் ஆஸ்திரேலியா சற்று சுமாரான பார்மில் இருப்பதால் அதை பயன்படுத்தி அப்போட்டியில் தங்களது அணி வெல்லும் என்று இலங்கை ரசிகர்கள் மீண்டும் உறுதியாக நம்புகின்றனர். அதனால் ஆஸ்திரேலியா தப்புமா என்று பொ றுத்திருந்து பார்ப்போம். அதே போல் மறுபுறம் இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சொதப்பி தோற்ற அயர்லாந்து தன்னுடைய அடுத்த போட்டியில் வலுவான இங்கிலாந்தை வரும் அக்டோபர் 26இல் சந்திக்கிறது.

Advertisement