IND vs SL : இறுதிவரை போராடி தோற்ற இந்திய அணி. கடைசி ஓவரில் ஏற்பட்ட திருப்பம் – நடந்தது என்ன?

IND vs SL Arsheep Singh
Advertisement

துபாயில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றாலும் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் போராடி தோல்வியடைந்தது. அதனால் பைனலுக்கு செல்ல செப்டம்பர் 6ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா – சாவா நிலையில் இந்தியா களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்க வீரர் கேஎல் ராகுல் 6 (7) ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்த ஓவரிலேயே விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால் 13/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து அனலாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இலங்கை பவுலர்களை சரவெடியாக எதிர்கொண்டார். 3வது ஓவரில் ஜோடி சேர்ந்து 13 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்டு 97 ரன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இந்தியாவை காப்பாற்றி வலுப்படுத்தியது. அதில் நெருப்பாக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 72 (41) ரன்களை 175.61 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்டு ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சொதப்பிய மிடில் ஆர்டர்:
ஆனால் அதன்பின் சொதப்பியது போல் அடுத்த சில ஓவர்களில் சூரியகுமார் யாதவ் பவுண்டரி 34 (29) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 17 (13), ரிஷப் பண்ட் 17 (13), தீபக் ஹூடா 3 (4) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளித்தனர். கடைசியில் 1 சிக்சருடன் 15* (7) ரன்கள் எடுத்து அஷ்வின் ஓரளவு காப்பாற்றியதால் தப்பிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 173/8 ரன்கள் சேர்த்தது. இலங்கை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மதுசனாகா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 174 ரன்களை துரத்திய இலங்கைக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி 12 ஓவர்கள் வரை சிம்ம சொப்பனமாக இந்திய பவுலர்களை புரட்டியெடுத்து 97 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கத்தை கொடுத்த ஓபனிங் ஜோடியில் நிசாங்கா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (37) ரன்களில் சஹாலிடம் ஆட்டமிழக்க அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய அசலங்கா டக் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் அடுத்து களமிறங்கிய குணதிலகா 1 (7) ரன்னில் அவுட்டாக மறுபுறம் இந்தியாவுக்கு சவால் கொடுத்த மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (37) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஏமாற்றிய பவுலர்கள்:
அதனால் வெற்றியை நெருங்கிய இலங்கைக்கு கடைசி 5 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்ட போது கேப்டன் சனாகா மற்றும் ராஜபக்சா ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். 16, 17, 18 ஆகிய ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் ஓவருக்கு 10 ரன்களை எடுத்து ரன் ரேட்டை கட்டுக்குள் கொண்டு வந்ததால் இந்தியாவின் மீது தொடர்ந்து அழுத்தம் இருந்தது. அதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய புவனேஸ்வர் குமார் மீண்டும் 14 ரன்களை வாரி வழங்கியதால் கடைசி ஓவரில் 6 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய பரிதாப நிலைமை இளம் வீரர் அர்ஷிதீப் சிங்க்கு ஏற்பட்டது.

அதில் 1, 1, 2, 1 என முடிந்தளவுக்கு போராடிய அவர் 5வது பந்தில் 2 பைஸ் கொடுத்து தோல்வியடைந்தார். மறுபுறம் இந்திய பவுலர்களை கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக எதிர்கொண்ட கேப்டன் ஷனகா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (18) ரன்களும் பனுக்கா ராஜபக்சா 2 சிக்சருடன் 25* (17) ரன்களும் எடுத்து பினிஷிங் கொடுத்தனர். அதனால் 19.5 ஓவரில் 174/4 ரன்களை எடுத்த இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் சூப்பர் 4 போட்டியிலும் வென்ற காரணத்தால் பைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது.

காரணம் என்ன:
மறுபுறம் இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் 3 விக்கெட்டுகளை எடுத்து போராடினாலும் பேட்டிங்கில் 180 ரன்களை கூட எடுக்காதது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. குறிப்பாக ரோகித் சர்மாவின் போராட்டத்தை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வீணடித்தனர். மேலும் பந்துவீச்சில் ஆரம்பத்திலேயே விக்கெட்டை எடுக்காமல் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க விட்டு கோட்டைவிட்ட பவுலர்களும் சுமாராக செயல்பட்டனர்.

அதுபோக தீபக் ஹூடாவுக்கு மீண்டும் ஒரு ஓவர் கூட வாய்ப்பு கொடுக்காத ரோகித் சர்மாவின் சுமாரான கேப்டன்ஷிப், மீண்டும் தினேஷ் கார்த்திக்கை கழற்றிவிட்ட தவறான அணித்தேர்வு, புவனேஸ்வரின் பொறுப்பற்ற 19வது ஓவர் போன்ற அம்சங்கள் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியில் வென்றால் கூட பைனலுக்கு செல்வதற்கு 90% வாய்ப்புகள் குறைவு மாறியுள்ளதால் இத்தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா கோப்பையை தக்க வைக்காமல் வீட்டுக்கு கிளம்புவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Advertisement