
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று ஹோபர்ட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.
பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 18.3 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அவருக்கு அடுத்து திலக் வர்மா 29 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது : 19-20 போட்டிகளுக்கு பிறகு டாசில் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
டாசில் வெற்றி பெற்றது இந்த போட்டியில் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த ஆட்டத்தில் எங்களது அணி வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக நாங்கள் செய்த மாற்றங்களினால் வெற்றி கிடைத்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. ஒவ்வொரு வீரருமே ஒவ்வொரு போட்டிக்காகவும் மிகச் சிறப்பாக தயாராகி வருகின்றனர்.
வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். ஜிதேஷ் சர்மாவும் அவருடன் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோன்று பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தார்.
இதையும் படிங்க : 18.3 ஓவரிலேயே 188 ரன்ஸ்.. ஹோபார்ட்டில் யாரும் செய்யாததை செய்த இந்தியா.. ஆஸியை வீழ்த்தி உலக சாதனை வெற்றி
பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவருமே டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் எப்படி நம்பிக்கையான ஜோடியாக இருக்கிறார்களோ அதேபோன்று பந்துவீச்சில் இவர்கள் ஜோடியாக சிறப்பாக செயல்படுகின்றனர். பும்ரா பந்துவீச்சில் மிகக் கட்டுக்கோப்பாக செயல்படும் வேளையில் அர்ஷ்தீப் சிங் அதனை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கிறார் என்றும் சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.