தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று செஞ்சூரியன் நகரில் நடைபெற்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து கடைசி போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றும்.
என்கிட்ட சொல்லிட்டுதான் திலக் வர்மா சதம் அடிச்சாரு :
நேற்று நடைபெற்ற முடிந்த இந்த மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடிய திலக் வர்மா திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியில் 56 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் என 107 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இந்த அதிரடி காரணமாகவே இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் வழக்கமாக களமிறங்கும் மூன்றாவது இடத்தில் திலக் வர்மா களமிறங்க என்ன காரணம்? என்றும் அவர் சதம் அடித்தது குறித்தும் பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : திலக் வர்மா இரண்டாவது போட்டி முடிந்த பின்னர் மூன்றாவது போட்டிக்கு முன்னதாக என்னுடைய அறைக்கு வந்து நான் மூன்றாவது இடத்தில் களமிறங்க விருப்பப்படுகிறேன்.
அப்படி அந்த இடத்தில் எனக்கு வாய்ப்பு அளித்தால் நிச்சயம் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்துவதாக கூறினார். அதன் காரணமாகவே நான் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கினேன். அதோடு நீ எனக்கு முன்னால் சென்று உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
இதையும் படிங்க : வெற்றிக்கான வாய்ப்பு இருந்தும் இப்படி நடந்தது கஷ்டமா இருக்கு.. தோல்விக்கு பிறகு – மார்க்ரம் வருத்தம்
அதன்படியே அவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவருக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக சூரியகுமார் யாதவ் கூறினார். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நவம்பர் 15-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.



