
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சென்றடைந்து அங்கு நடைபெறவிருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நவம்பர் 8-ஆம் தேதியான இன்று இரவு 8.30 மணி அளவில் டர்பன் நகரில் உள்ள கிங்ஸ் மீட் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடரில் முதன்மை வீரர்களை தவிர்த்து இளம் வீரர்களை கொண்ட அணி விளையாடுவதால் இந்த நான்கு போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பல்வேறு விடயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் அவரது தனிப்பட்ட ஆட்டம் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் : நான் எப்போதுமே டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட விரும்புபவன். அதனால்தான் என்னால் தொடர்ச்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் களத்தில் ஒரு கேப்டனாக செயல்படும்போது நான் ஆக்ரோஷமாக செயல்பட முடியாது. ஏனெனில் களத்தில் நிற்கும் அனைத்து வீரர்களின் மனநிலையையும் நான் ஒரு கேப்டனாக புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனாலேயே ஆக்ரோஷமாக இல்லாமல் அமைதியான கேப்டனாக இருக்கிறேன். ஒவ்வொரு வீரர்களின் மனநிலையும் புரிந்து கொண்டால் மட்டுமே அணியை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருந்து திறமையை வெளிக்கொண்டுவர முடியும். அதற்கான சுதந்திரத்தையும் ஒரு கேப்டனாக நான் அனைத்து வீரர்களுக்கும் வழங்கி வருகிறேன். அதேபோன்று களத்திற்கு உள்ளேவும் வெளியேயும் வீரர்களுடன் அதிக நேரத்தை செலவழித்து அவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இதன் மூலம் வீரர்களுக்கும் எனக்குமான புரிதல் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து பல்வேறு கேள்விக்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவிடம் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஏன் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக தான் செயல்படுகிறார். இருந்தாலும் அவருக்கு முன்னதாக அணியில் இடம் பிடித்த பலவீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் 2 சாதனைகளை படைக்க காத்திருக்கும் – சூரியகுமார் யாதவ்
எனவே வரிசையாக ஒவ்வொருவருக்கும் அணி நிர்வாகம் தேவைப்படும்போது வாய்ப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் இனிவரும் காலங்களில் வாய்ப்பு கிடைக்கும். எனவே அவர் சற்று பொறுமை காக்க வேண்டியது அவசியம். என்னை பொறுத்தவரை நிச்சயம் அவர் மூன்று வகையான அணிலும் இடம் பிடிக்கக்கூடிய தகுதியான வீரர் தான் என்று சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.