
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது ஷிவம் துபேவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாடியது பெருமளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா களமிறங்கியது தான் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும்போது முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆறாவது இடத்தில் களமிறங்கிய ஷிவம் துபே 34 பந்துகளை சந்தித்து ஏழு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 53 ரன்கள் குவித்து போட்டியின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதற்கு முன்னதாக 20-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷிவம் துபேவுக்கு தலையில் அடிபட்டது. இதன் காரணமாக அப்போதே அவருக்கு கன்கஷன் சோதனை செய்யப்பட்டாலும் கடைசி பந்தினை விளையாடி விட்டு பின்னர் ஓய்வறைக்கு திரும்பினார். ஆனால் அவர் இரண்டாம் பாதியில் பீல்டிங் செய்ய வரவில்லை.
அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா களத்திற்கு வந்தது மட்டுமின்றி 10 ஓவர்கள் தாண்டி பந்துவீச வந்து நான்கு ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சே இங்கிலாந்து அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
இதன்காரணமாக எப்படி ஷிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாடலாம்? இது விதிமுறைக்கு உட்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகள் இருந்தன. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் இறுதியாக இந்த விடயம் குறித்தும் பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஷிவம் துபேவால் மீண்டும் பில்டிங் செய்ய வர முடியவில்லை.
இதையும் படிங்க : இதுதான் சாம்பியனுக்கு அழகா?.. அப்பட்டமாக இந்திய அணி செய்த தவறால் எழுந்துள்ள விமர்சனம் – என்ன நடந்தது?
அவருக்கு ஏற்கனவே கன்கஷன் பரிசோதனை செய்யப்பட்டதால் அவரை ஓய்வெடுக்க மருத்துவக்குழு கேட்டுக் கொண்டது. அதன் காரணமாகவே ஹர்ஷித் ராணா மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக வந்து மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் என சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.