இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நாளை ஜூன் 27-ஆம் தேதி பல்லகல்லே நகரில் துவங்குகிறது. இந்த போட்டியில் கேப்டனாக சூரியகுமார் யாதவும், பயிற்சியாளராக கௌதம் கம்பீரும் செயல்பட உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு புதிய கேப்டனாக பாண்டியா தான் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வேளையில் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இப்படி புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டதற்கு காரணமே கெளதம் கம்பீர் தான் என்றும் கம்பீர் சூர்யகுமார் யாதவின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்குவது குறித்தும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்தும் சில கருத்துக்களை சூரியகுமார் யாதவ் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வெற்றி பெறும்போது, தோல்வி வரும்போதும் எவ்வளவு நிதானமாக இருக்க வேண்டும் என்பதை இந்த விளையாட்டு மூலமாக கற்றுக் கொண்டேன்.
மைதானத்தில் என்ன சாதனை செய்தாலும், எவ்வளவு சொதப்பலாக விளையாடினாலும் அதனை மைதானத்திலேயே விட்டு விட்டு வர வேண்டும். ஏனென்றால் வாழ்வின் ஒரு பகுதி தான் கிரிக்கெட்டாக இருக்கிறது. சிறப்பாக விளையாடும் போது உச்சத்தில் இருக்கலாம் என்றும் மோசமாக விளையாடும் போது கீழ்நிலைக்கு செல்வோம் என்றும் எடுத்துக்கொள்ள தேவையில்லை.
நல்ல மனிதராக இருந்தால் எப்போதுமே நல்லதே நடக்கும். கௌதம் கம்பீர் உடனான எனது உறவு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் கேகேஆர் அணிக்காக நான் விளையாடிய போது எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்ததே அவர்தான். நான் எப்படி சிந்திப்பேன், எப்படி விளையாடுவேன், எப்படி யோசிப்பேன் என்பது குறித்த எனது அணுகுமுறை எல்லாம் அவருக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பயிற்சியாளராக இதைக்கூட செய்யத் தெரியாம இருக்க.. கம்பீர் ஒன்னும் முட்டாள் கிடையாது.. சாஸ்திரி ஓப்பன்டாக்
ஏற்கனவே கௌதம் கம்பீர் கே.கே.ஆர் அணியின் கேப்டனாக இருந்தபோது இளம்வீரராக இருந்த சூரியகுமார் யாதாவிற்கு அந்த அணியின் துணை கேப்டன் பதிவை வழங்கியதும் கம்பீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.



