தேசிய கீதம் ஒலித்த போது நான் கண்கலங்கி அழ இதுவே காரணம் – சிராஜ் பேட்டி

Siraj

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் துவங்கியது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமன் நிலையில் உள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று துவங்கிய மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்தது.

இன்றைய போட்டியில் மழை காரணமாக பெரும்பகுதி ஆட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த போட்டிக்கு துவங்குவதற்கு முன்னர் இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது இந்தியாவின் தேசியகீதம் ஒலிக்கையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் தன்னை மீறி கண் கலங்கி அழுதார். இதுதொடர்பான வீடியோ உடனடியாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

மேலும் அழுத பின்னர் கைகளால் தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு உற்சாகமாக விளையாடத் தொடங்கினார். இன்றைய போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் 5 ரன்களில் ஆட்டம் இழக்க வைத்த சிராஜ் இந்த போட்டியிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தேசியகீதம் ஒலிக்கும் போது தான் அழுததற்கான காரணம் என்னவென்று அவர் போட்டி முடிந்து பகிர்ந்துகொண்டார்.

siraj

அதன்படி தேசியகீதம் ஒலிக்கையில் அவருக்கு அவருடைய அப்பா நினைவு வந்து விட்டதால் உணர்ச்சியின் வெளிப்பாடாக அழுது விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் தேர்வான போது அவரது தந்தை ஹைதராபாதில் காலம் அடைந்தார். தந்தையின் இறப்புக்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றும் அப்படி விளையாடி கிடைக்கும் வெற்றியை அவருக்கு அஞ்சலியாக செலுத்த வேண்டும் என்ற தொடருக்கு முன்னர் சபதம் ஏற்றுக் கொண்டார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் பங்கேற்ற இரண்டாவது போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றியை தேடித்தந்தார். இன்றைய போட்டியிலும் அபாயகரமான வீரரான வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி அவர் அசத்தியது குறிப்பிடத்தக்கது.