இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் முன்னாள் கேப்டனான விராட் கோலியுடன் மிக நெருக்கமான பிணைப்பில் இருக்கும் ஒருவராக பார்க்கப்படுகிறார். ஏனெனில் தனது கரியரின் ஆரம்பகட்ட ஐபிஎல் போட்டிகளின் போது முகமது சிராஜ் மிகவும் தடுமாறிய வேளையில் அவரிடம் இருக்கும் திறமையை கண்டறிந்த விராட் கோலி அவரை ஆர்சிபி அணியில் எடுத்ததோடு மட்டுமின்றி அவரை மிகச்சிறந்த வீரராக மாற்றி இந்திய அணிக்கும் கொண்டு வந்தார்.
விராட் கோலியின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திய சிராஜ் :
இதன் காரணமாக தான் எப்போதும் விராட் கோலிக்கு கடமை பட்டுள்ளேன் என முகமது சிராஜ் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தனது கிரிக்கெட் கரியரில் விராட் கோலியின் பங்கு மிகப் பெரியது என்றும் அவருடைய ஆலோசனைகளின் படியே தான் நடந்து வருவதாகவும் பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியில் விளையாடி வரும் அவர் விராட் கோலியின் தலைமையின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். விராட் கோலியின்றி முதல் முறையாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த முகமது சிராஜ் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராகவும் சாதனை நிகழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து தொடரை முடித்து நாடு திரும்பியுள்ள முகமது சிராஜ் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் விராட் கோலியின் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை மற்றும் அவர் வைத்திருக்கும் அன்பு வெளிப்படும் விதமாக ஒரு விடயம் தென்பட்டுள்ளது. அந்த வகையில் : கடந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது சிட்னியில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி கடைசியாக விளையாடியிருந்தார்.
அதன்பிறகு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் விராட் கோலி கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய ஜெர்சியை அவருடைய கையொப்பத்துடன் பரிசாக பெற்றுள்ள முகமது சிராஜ் அதனை தனது ஹைதராபாத் வீட்டில் பிரேம் செய்து ஹாலில் மாட்டியுள்ளார்.
இதையும் படிங்க : பும்ரா இல்லாம இந்தியா ஜெயிச்சதுக்கு.. அவங்கள பாராட்டியே ஆகனும்.. டெஸ்ட் தொடர் குறித்து – மைக்கல் கிளார்க்
இதன் மூலம் விராட் கோலியின் மீது அவர் வைத்திருக்கும் அன்பு மரியாதை வெளிப்படுகிறது. தனது கிரிக்கெட் குருவாக பார்க்கும் விராட் கோலியிடம் இருந்து கடைசியாக பெற்ற பரிசை இப்படி முகமது சிராஜ் தனது வீட்டு ஹாலில் மாட்டி வைத்திருப்பதை கண்ட ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



