இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து டெஸ்ட் தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்பார் என்று நிர்வாகம் தெளிவாக அறிவித்துவிட்டது. அதுதவிர்த்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீரும் பணிச்சுமை காரணமாக பும்ராவை மூன்று போட்டிகளில் மட்டும்தான் பயன்படுத்துவோம் என்றும் முக்கியமான போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் மற்ற இரண்டு போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்படும் என்ற தெளிவான விளக்கத்தையும் அளித்திருந்தார்.
பும்ரா 4 ஆவது போட்டியில் ஆடுவார் : உறுதிசெய்த முகமது சிராஜ்
அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் தான் விளையாடுவார் என்று தெரிகிறது. ஆனால் பும்ரா எந்த ஒரு ஆட்டத்தில் விளையாடப்போகிறார் என்று உறுதியாக கூறப்படவில்லை.
ஏற்கனவே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியின் போது 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்ததால் இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக நான்காவது போட்டியில் அவர் விளையாடியே ஆகவேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக பும்ரா நான்காவது போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் அதிகளவு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் மற்றொன்றோடு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவார் என உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
பும்ரா நிச்சயம் நான்காவது போட்டியில் விளையாடுவார். ஆனால் எங்களது பௌலிங் காம்பினேஷனில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். இருந்தாலும் நாங்கள் சரியான ஏரியாவில் பந்துவீச விரும்புகிறோம். எங்களது திட்டத்தை எல்லாம் மிகவும் எளிமையாக வைத்துக் கொண்டு நல்ல இடத்தில், நல்ல லென்த்தில் பந்துவீச விரும்புவதாகவும் சிராஜ் கூறினார். இதன்மூலம் பும்ரா நான்காவது போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : திடீர்னு அவரை ஏன் சேத்தாங்கனு தெரியல.. என்னதான் நடக்குது இந்திய அணியில்? – ஆகாஷ் சோப்ரா கேள்வி
அதோடு தொடர்ந்து இந்திய அணி வீரர்களின் காயம் குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது இந்திய அணியின் சில வீரர்கள் காயமடைந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் அனைவரும் மருத்துவக்குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். ஆகாஷ் தீப்பிற்கு இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் இன்றைய பயிற்சியின் போது பந்துவீசி இருந்தார். எனவே பிசியோதெரபி டாக்டர்கள் என்ன கூறுகிறார்களோ அதன்படியே அவரது தேர்வு அமையும் என்றும் சிராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



