
காபா மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அந்த நிலையில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 405-7 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 101, டிராவிஸ் ஹெட் சதமடித்து 152 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார்கள். இந்திய அணிக்கு இதுவரை அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முன்னதாக இந்த தொடரில் ஆரம்பம் முதலே ஜஸ்ப்ரித் பும்ரா தனி ஒருவனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார்.
அவருக்கு கை கொடுக்க வேண்டிய முகமது சிராஜ் ஓரிரு விக்கெட்டுகளை எடுத்தாலும் அதற்கு நிகராக ரன்களை வாரி வழங்குகிறார். அந்த வரிசையில் இந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் 53 ரன்கள் எடுத்து நன்கு செட்டிலானார். அப்போது லெக் சைட் திசையில் அவர் அடிக்கக்கூடாது என்பதற்காக சிராஜ் 2 ஃபீல்டர்களை நிறுத்தினார். ஆனால் அதற்கு தகுந்தார் போல் பந்து வீசாத அவர் பவுன்சர் பந்தை வீசினார்.
மறுபுறம் அதை அல்வா போல எதிர்கொண்ட ஹெட் அப்பர் கட் ஷாட் வாயிலாக விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே எளிதாக பவுண்டரி அடித்தார். அதைப் பார்த்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் கேட்டிச் என்ன ஒரு முட்டாள்தனமான ஆட்டம் என்று சிராஜை நேரலையில் விமர்சித்தார். இது பற்றி கிரிக்கெட் 7 சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “சிராஜிடம் இருந்து இதை நம்ப முடியவில்லை”
“ஏனெனில் இந்த ஓவருக்கு முந்தைய ஓவரில் அந்த இடத்தில் அவர் ஃபீல்டரை கொண்டிருந்தார். ஆனால் அப்போது இந்த பந்தை வீசாத அவர் இப்போது ஃபீல்டர் இல்லாத நேரத்தில் இப்படி வீசியுள்ளார். இது முட்டாள்தனமான ஆட்டம். குதிரை முட்டிக்கொண்டது நண்பா” என்று கூறினார். அந்த வகையில் இரண்டாவது போட்டியை போலவே இந்தப் போட்டியிலும் இந்தியாவின் பவுலிங் முன்னேறவில்லை.
இதையும் படிங்க: 16 வயதில் 1.60 கோடி.. பாகிஸ்தானை நொறுக்கி இந்தியாவை வெற்றி பெற வைத்த தமிழக வீராங்கனைக்கு ஜேக்பாட்
அதே போல இந்தியாவின் பேட்டிங் தற்போது சுமாராகவே இருக்கிறது. அதனால் இந்த போட்டியில் எப்படியாவது மழை வந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் இந்தப் போட்டியில் தோற்றால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா தவற விடும் என்பது குறிப்பிடத்தக்கது.