ஐபிஎல் 2021 கோப்பை வென்ற சென்னைக்கும் 2022 ஆசிய கோப்பை வென்ற இலங்கைக்கும் இடையேயான 6 ஒற்றுமைகள்

CSK and Srilanka
- Advertisement -

விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக சமீபத்தில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் நடப்புச் சாம்பியன் மற்றும் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கிய இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. ஆனால் தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் இலங்கை ஆர்ப்பாட்டமின்றி இளம் வீரர்களை வைத்து எதார்த்தமாக விளையாடி யாருமே எதிர்பாராத வகையில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் துவண்டு கிடக்கும் இலங்கை கிரிக்கெட்டில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆரம்பத்தில் இந்த தொடரை தோல்வியுடன் துவக்கிய அந்த அணி இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெறாது என்று அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அதன்பின் வங்கதேசத்துக்கு எதிராக கொதித்தெழுந்த அந்த அணி சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தானை தோற்கடித்து இறுதிப் போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை தோற்கடித்து 6வது ஆசிய கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. மேலும் ஃபைனல் நடந்த அதே துபாய் மைதானத்தில் 2021 ஐபிஎல் தொடரின் பைனலில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்றதை மனதில் வைத்து செயல்பட்டது கோப்பையை வெல்ல உத்வேகத்தை கொடுத்ததாக போட்டி முடிந்த பின் இலங்கை கேப்டன் தசுன் சனாக்கா வெளிப்படையாக பாராட்டியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் உண்மையாகவே சென்னையும் இலங்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக செயல்பட்டு கோப்பையை வென்றதில் நிகழ்ந்த 6 ஒற்றுமைகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

6. டாஸ் தோல்வி: சமீப காலங்களில் பாலைவமான துபாயில் நடைபெறும் இரவு நேர டி20 போட்டிகளில் டாஸ் வென்று சேசிங் செய்தால் 99% வெற்றி உறுதி என்ற நிலைமை இருந்து வருகிறது. 2021 டி20 உலகக்கோப்பை உட்பட துபாயில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் டாஸ் தோற்ற அணிகள் கடைசிடில் தோற்ற நிலையில் 2021 ஐபிஎல் தொடரின் ஃபைனலில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சென்னை 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் பந்துவீச்சில் அசத்திய அந்த அணி கொல்கத்தாவை வெற்றி பெற விடாமல் இலக்கை கட்டுப்படுத்தி டாஸ் என்பதை விதிவிலக்காக மாற்றி 4வது கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதேபோல் இந்த ஆசிய கோப்பையிலும் டாஸ் தோற்றும் 58/5 என்ற மோசமான நிலைமையை சந்தித்தும் அதிலிருந்து மீண்டெழுந்த இலங்கை 171 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. பின்னர் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களை கொண்ட பாகிஸ்தானை அற்புதமாக பந்துவீசி மடக்கி பிடித்த இலங்கை சென்னையை விட அட்டகாசமான வெற்றி பெற்றது.

- Advertisement -

5. நிறுத்தப்பட்ட நீலநிறம்: 2021 ஐபிஎல் தொடரில் நீலநிற ஜெர்ஸியுடன் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் களமிறங்கிய மும்பையை தோற்கடித்து தடுத்து நிறுத்திய சென்னை 4வது கோப்பையை வென்று 2வது வெற்றிகரமான அணியாக தன்னை நிரூபித்தது.

அதேபோல் 2016 முதல் தொடர்ச்சியாக தோல்வியடையாமல் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்புச் சாம்பியனாகவும் நீலநிற ஜெர்ஸியுடன் களமிறங்கிய இந்தியாவை தோற்கடித்து தடுத்து நிறுத்திய இலங்கை 6வது கோப்பையை வென்று தன்னை 2வது வெற்றிகரமான அணியாக நிரூபித்தது.

- Advertisement -

4. ஜெர்ஸி நம்பர்: இந்தியா மற்றும் சென்னையின் மாயாஜால கேப்டன் எம்எஸ் தோனியின் 7 என்ற ஜெர்சி நம்பர் உலக அளவில் புகழ் பெற்றதாகும். அவரது தலைமையில் 2021இல் கோப்பையை வென்றது போல் அவரது ரசிகரான இலங்கை கேப்டன் சனக்காவும் அதே நம்பரை தனது ஜெர்ஸியில் பயன்படுத்தி கோப்பையை வென்றுள்ளார்.

3. சூப்பர் ஒற்றுமை: 2021 ஐபிஎல் பைனலில் எதிரணியான கொல்கத்தாவின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் அரை சதமடித்தாலும் 3வது இடத்தில் களமிறங்கிய நித்திஸ் ராணா கோல்டன் டக் அவுட்டானார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் 9வது பேட்ஸ்மேனான லாக்கி பெர்குசன் 18 ரன்கள் அடித்து இரட்டை இலக்க ரன்களை தொட்டார்.

- Advertisement -

ஆச்சரியப்படும் வகையில் 2022 ஆசிய கோப்பை பைனலில் எதிரியான பாகிஸ்தானின் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் அரைசதம் கடந்தாலும் 3வது இடத்தில் களமிறங்கிய பக்கார் ஜமான் கோல்டன் டக் அவுட்டானார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக 9வது பேட்ஸ்மேனான ஹாரீஸ் ரவூப் 13 ரன்கள் அடித்து இரட்டை இலக்க ரன்களை தொட்டார்.

2. எதிரணியின் பலம்: அதுபோக 2021 ஐபிஎல் பைனலில் தோற்ற கொல்கத்தா 2 ஐபிஎல் கோப்பையை மட்டும் வென்றுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் இதுவரை 2 ஆசிய கோப்பைகளை மட்டுமே வென்றுள்ளது மற்றொரு ஆச்சரியமாகும்.

1. முந்தைய சொதப்பல்: பொதுவாக தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்பார்கள். அந்த வகையில் 2021இல் கோப்பையை வென்ற சென்னை அதற்கு முந்தைய 2020 சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் முதல் அணியாக வெளியேறியது. அதேபோல் 2022 ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அதற்கு முந்தைய தொடரான 2018இல் முதல் அணியாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement