
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. ஆனால் ஜூலை 6ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே உலக சாம்பியனான இந்தியாவை 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோற்கடித்தது.
ஹராரே நகரில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 115/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 17, பெனெட் 22, வேஸ்லே 21, க்ளைவ் மடண்டே 29* ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 116 ரன்களை துரத்திய இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வெற்றிக்கான காரணம்:
ஆனால் ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே அணியின் தரமான பந்து வீச்சில் சுமாராக விளையாடிய இந்தியா 19.5 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அவமான தோல்வியை பதிவு செய்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் 31, வாஷிங்டன் சுந்தர் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 3, சதாரா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய கேப்டன் சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் உலக சாம்பியனான இந்தியா அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிக்கு வெறித்தனமாக வருவார்கள் என்று ராசா கூறியுள்ளார். ஆனால் அதற்கு சமமாக தாங்களும் அடித்து தொடரை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இந்த வெற்றிக்கான காரணம் பற்றி பேசியது பின்வருமாறு.
“இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். வேலையும் தொடரும் இன்னும் முடியவில்லை. உலக சாம்பியனான இந்தியா உலக சாம்பியன் போல விளையாட வருவார்கள். எனவே நாங்கள் அடுத்த போட்டிக்கு தயாராக இருக்க வேண்டும். இது 115 ரன்கள் மட்டுமே எடுக்கக்கூடிய பிட்ச் கிடையாது. 2 அணி பவுலர்களும் நன்றாக செயல்பட்டனர்”
இதையும் படிங்க: நான் நின்றுந்தா கதையே வேற.. பந்து வீச்சில் அசத்தியும் ஜிம்பாப்வேவிடம் தோற்க இதான் காரணம்.. கில் வருத்தம்
“இது இன்னும் எங்களுடைய திறமையை உயர்த்த வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும். ரசிகர்களுக்கும் அணிக்கும் உண்மையாக இருக்கும் வரை முடிவைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று நான் சொல்வேன். இப்போட்டிக்காக நாங்கள் திட்டங்களை வைத்திருந்தோம். அதை பின்பற்றி வெற்றி கண்டோம். களத்தில் எங்களுடைய கேட்ச்சிங் மற்றும் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. இருப்பினும் சில தவறுகள் செய்ததால் அதில் நாங்கள் முன்னேற வேண்டும். வெற்றியால் ரசிகர்கள் எங்களை தூக்குவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களுக்கும் பாராட்டுகள். அவர்களின் ஆதரவு எங்களுக்கு உதவியது” என்று கூறினார்.