தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக கடைசிப் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனால் ஐசிசி தரவரிசையில் இந்தியா தங்களை நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்துள்ளது.
அத்துடன் இந்த வெற்றியையும் சேர்த்து 2022 முதல் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 9 இருதரப்பு டி20 தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக இருதரப்பு தொடர்களை வென்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 2006 – 2010 காலகட்டங்களில் ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் 8 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதே முந்தைய சாதனை.
நம்பர் ஒன் இந்தியா:
இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 25 வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா பதிலடி கொடுத்தது. தற்போது டி20 தொடரையும் வென்றுள்ள இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு டபுள் பதிலடி கொடுத்து சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில் உண்மையாகவே ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருப்பதற்கு தகுதியானவர்கள் என்று தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் பாராட்டியுள்ளார். மேட்ச் வின்னர்கள் நிறைந்த இந்தியாவை தோற்கடிக்க அனைத்து நேரமும் நீங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
தென் ஆப்பிரிக்கா கோச் பாராட்டு:
“நீண்ட காலமாகவே இந்தியா சிறந்த டி20 அணிக்கு நெருக்கமாக இருந்து வருகிறார்கள். எதிரணிகளுக்கு நரகத்தைக் கொடுக்கும் வகையில் விளையாடும் அவர்களுக்கு எதிராக வெற்றி பெற நீங்கள் அனைத்து நேரங்களிலும் உங்களுடைய ஆட்டத்தின் மேல் இருக்க வேண்டும். அவர்கள் பேட்டிங்கில் வந்து விளையாடிய விதத்தைப் பாருங்கள். முதல் பந்திலிருந்தே அவர்கள் தொடர்ச்சியாக எங்கள் பவுலர்கள் மேலே அழுத்தத்தைப் போட்டார்கள்”
இதையும் படிங்க: பும்ரா, வருணை விட.. தெ.ஆ தோல்விக்கு காரணமான அவர் தான் இந்தியாவின் வெற்றி வித்யாசம்.. கோச் பாராட்டு
“அதே போல பந்து வீச்சில் அவர்கள் சில மேட்ச் வின்னர்களை கொண்டுள்ளார்கள். எனவே உங்களுடைய கேள்விக்கான பதில், உண்மையாக சொல்ல வேண்டுமெனில் இந்தியாவை விட சிறந்த அணி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே அவர்கள் சிறந்த அணிகளின் தரவரிசையில் மேலே இருப்பார்கள்” என்று கூறினார்.



