சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி ஒவ்வொரு மாதமும் உலக கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஸ்பெஷல் விருதை வழங்கி வருகிறது. அதன் படி 2025 ஜூலை மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்தர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதனுடைய முடிவை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் படி 2025 ஜூலை மாதத்தின் ஐசிசி சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் சுப்மன் கில் 3 டெஸ்ட் போட்டிகளில் 567 ரன்களை 94.40 சராசரியில் அடித்தார். குறிப்பாக பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் மட்டும் அவர் 430 (269, 161) ரன்கள் அடித்தார்.
4வது முறையாக வென்ற கில்:
அதன் வாயிலாக பல சாதனைகளைப் படைத்த அவர் இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெளிநாட்டு மண்ணில் இந்தியா மிகப்பெரிய சாதனை வெற்றியைப் பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் பென் ஸ்டோக்ஸ், முல்தர் ஆகிய இருவரையும் முந்திய சுப்மன் கில் ஐசிசி வழங்கும் அந்த ஸ்பெஷல் விருதை வென்றுள்ளார்.
இதற்கு முன் ஏற்கனவே அவர் 2023 ஜனவரி, 2023 செப்டம்பர், 2025 பிப்ரவரி மாதங்களின் சிறந்த ஐசிசி வீரர் விருதை வென்றுள்ளார். தற்போது 2025 ஜூலை மாதத்தையும் சேர்த்து அவர் 4வது முறையாக அந்த விருதை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐசிசி சிறந்த மாதாந்திர வீரர் விருதை 4 முறை வென்ற முதல் வீரர் என்ற உலக சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
நாட்டுக்காக அசத்துவேன்:
இதுவரை ஆடவர் கிரிக்கெட்டில் வேறு எந்த வீரரும் ஐசிசி சிறந்த மாதாந்திர வீரர் விருதை 4 முறை வென்றதில்லை. மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே கார்ட்னர், ஹைலே மேத்தியூஸ் மட்டுமே அவ்விருதை 4 முறை வென்றுள்ளார்கள். அந்த வகையில் ஐசிசி மாதாந்திர விருது வெல்வதில் சாதனைப் படைத்துள்ள கில் இந்தியாவுக்கு மற்றுமொரு பெருமையைச் சேர்த்துள்ளார்.
இதையும் படிங்க: 53 ரன்ஸ்.. ஆஸியின் 9க்கு 9 வெற்றி நடையை உடைத்த தெ.ஆ.. ப்ரேவிஸ் அதிரடியில் மிகப்பெரிய சாதனை வெற்றி
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தில் நடைபெற்ற தொடர் கேப்டனாக எனக்கு நல்ல அனுபவப் பாடத்தைக் கொடுத்தது. அத்தொடரில் இரு அணிகளுமே நீண்ட காலம் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அசத்தினார்கள். பர்மிங்காம் மைதானத்தில் அடித்த இரட்டை சதத்தை எப்போதும் நான் நினைவு கொள்வேன். இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்து ஐசிசி தேர்வாளர்களுக்கு நன்றி. இதே ஆட்டத்தை எனது நாட்டுக்காக தொடர உள்ளேன்” என்று கூறினார்.



