
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று துவங்க உள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி தற்போது நாடு திரும்பியுள்ள வேளையில் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளதால் இந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாட இருக்கிறது.
சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் அசத்திய சில வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்கள் இன்றி இளம் வீரர்களைக் கொண்ட இந்த அணியானது எவ்வாறு இந்த தொடரை அணுகப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பையை மனதில் வைத்து தற்போதே இந்திய அணியானது தங்களது தயாரிப்பினை துவங்க உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே தொடரில் புதிய கேப்டனாக செயல்பட இருக்கும் சுப்மன் கில் கேப்டன்சி பொறுப்பை ஏற்க்கப்போவது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி போன்று நானும் டி20 போட்டிகளில் துவக்க வீரராக விளையாடவே விரும்புகிறேன்.
அதே போன்று கேப்டனாக விளையாடும் போது எதிர்பார்ப்பும், அழுத்தமும் அதிகமாக இருக்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களின் உயரத்தை எட்ட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கும்.
இதையும் படிங்க : அவரோட விக்கெட்டை எடுத்து இந்தியாவை தோற்கடிக்கனும்.. செஞ்சு காட்டுறேன்.. ஜிம்பாப்வே வீரர் பேட்டி
அதே போன்று எனது இலக்கும் கேப்டனாக சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்பதுதான். ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த போது ஏராளமான விடயங்களை கற்றுக் கொண்டேன். தற்போது இந்திய அணிக்கும் கேப்டனாக மாறியுள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.