இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் பலத்த மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டியானது 25 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதற்கு பிறகு : சுப்மன் கில் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 25 ஓவர்களை பூர்த்தி செய்ய முடியாமல் 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : இந்த போட்டி டி20 போட்டி போல மாறிவிட்டது. ஏனெனில் போட்டி 25 ஓவராக குறைக்கப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் குர்பாஸ் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
இருந்தாலும் நாங்கள் அவர்களிடம் இருந்து மீண்டு வந்து சிறப்பான வெற்றியை பெற்றுள்ளோம். இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் குர்பாஸ் சதம் அடித்த போது ஆப்கானிஸ்தான் அணி வேகமாக ரன் குவித்தது. அதன்பின்னர் நாங்கள் மிடில் ஓவர்களிலும், இறுதிகட்ட ஓவர்களிலும் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இந்த போட்டியில் நாங்கள் அடைந்த வெற்றிக்கு பந்துவீச்சு மிக முக்கிய காரணம்.
இதையும் படிங்க : மாபெரும் சாதனையுடன் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற சுப்மன் கில் – விவரம் இதோ
அதேபோன்று நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து நன்றாக பேட்டுக்கு வந்ததால் மிகச் சிறப்பாக ரன்களை சேர்க்க முடிந்தது. இந்த போட்டியில் அறிமுகமான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த வெற்றி ஒரு முழுமையான வெற்றியாக எங்களுக்கு கிடைத்துள்ளது. இனிவரும் போட்டியிலும் இந்த வெற்றியை தொடர்வோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



