
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலாவதாக பேட்டிங் செய்து 155 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆர்.சி.பி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 161 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
அதே வேளையில் இந்த இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த குஜராத் அணி தங்களது இரண்டாவது சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : நாங்கள் இந்த போட்டியில் 180 முதல் 190 ரன்கள் வரை எடுத்திருந்தால் நிச்சயம் இது ஒரு நல்ல போட்டியாக அமைந்திருக்கும்.
இந்த ஆடுகளத்தில் ஆரம்பத்தில் பந்து சரியாக பேட்டுக்கு வரவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகம் கிடைத்தது. பவர்பிளே ஓவர்களிலேயே நாங்கள் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதிலும் குறிப்பாக இறுதிப்போட்டி போன்ற அழுத்தமான ஆட்டத்தில் இப்படி ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்ததால் சரியான முமென்ட்டம் கிடைக்காமல் போனது.
150 முதல் 160 ரன்கள் வரை எடுத்தால் நிச்சயம் இதுபோன்ற போட்டிகளுக்கு சரியான ஸ்கோராக இது இருக்காது என்று எங்களுக்கு தெரியும். இன்னும் கூடுதலாக ரன்களை சேர்த்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் பவர்பிளேவிலேயே விக்கெட் விழுந்ததால் எங்களால் அதிலிருந்து மீண்டுவர முடியவில்லை. அதேபோன்று பந்து வீச்சிலும் நாங்கள் ஆர்.சி.பி அணிக்கு எதிராக நிறைய ரன்களை வழங்கி விட்டோம்.
இதையும் படிங்க : இதெல்லாம் நான் கனவுல கூட நெனச்சி பாக்கல.. ஆனா எல்லாம் விதியால் எழுதப்பட்டது – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி
குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக வழங்கி விட்டோம். சற்று குறைவாக ரன்களை வழங்கி ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் போட்டியில் இருந்திருக்க முடியும். ஒட்டுமொத்தமாக ஆர்.சி.பி வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்து விட்டனர் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.