
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. கடினமான தொடராக பார்க்கப்பட்ட இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து நாடு திரும்பியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஏனெனில் அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்த தொடரை இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப்போகிறது? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்த தொடரில் மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இந்த தொடரை சமன் செய்து நாடு திரும்பியுள்ளது. அதிலும் குறிப்பாக கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சுப்மன் கில் இந்திய அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தியதும் பாராட்டினை பெற்று வருகிறது.
இந்த தொடரில் மொத்தம் 10 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த சுப்மன் கில் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களுடன் 754 ரன்கள் விளாசி தன் மீது இருந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்தியாவினை தவிர்த்து வெளியில் பெரியதாக சோபிக்க மாட்டார் என்று பேசப்பட்ட வேளையில் கேப்டனான முதல் தொடரிலேயே சுப்மன் கில் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த இங்கிலாந்து தொடரில் அவர் அசத்தியதால் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான ஐசிசி-யின் மாதாந்திர விருதும் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த விருதினை பெற்றுக்கொண்ட சுப்மன் கில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது : ஜூலை மாதத்திற்கான ஐசிசி விருதை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி.
கேப்டனாக நான் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இப்படி ஒரு விருது கிடைத்துள்ளது மேலும் மகிழ்ச்சி. இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டது மிகச் சிறப்பான தருணமாக பார்க்கிறேன். இரண்டு அணிகளுமே இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. நீண்ட நாட்கள் இந்த தொடரானது இரண்டு அணிகளுக்குமே நினைவில் இருக்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க : சூரியகுமாருக்கு அப்றம் விராட் கோலி.. மாதிரி திறமையான அவரை டி20 கேப்டனா போடுங்க.. தேவங் காந்தி அட்வைஸ்
மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த இங்கிலாந்து தொடரில் பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியின் போது இரட்டை சதத்தை அடித்ததை நான் எப்போதும் மறக்க மாட்டேன். இங்கிலாந்து தொடரில் எனது நினைவாக அந்த சதம் எப்போதும் என் மனதில் இருக்கும். ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரராக என்னை தேர்வு செய்த ஐசிசி நிர்வாகத்திற்கு நன்றி எனவும் சுப்மன் கில் பேசியது குறிப்பிடத்தக்கது.