
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதியான இன்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததால் இந்திய அணி முதலில் தங்களது இன்னிங்சை விளையாடி முடித்துள்ளது.
அந்த வகையில் இன்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணியானது 356 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களையும், விராட் கோலி 52 ரன்களையும் குவித்தனர்.
இன்றைய போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சதம் அடித்ததோடு மட்டுமின்றி ஏகப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் முன்னாள் ஜாம்பவனான சச்சின் மற்றும் தற்போதைய நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் கூட ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்தாத ஒரு சாதனையை இன்றைய போட்டியில் அடித்த சதத்தின் மூலம் சுப்மன் கில் நிகழ்த்தியுள்ளார்.
அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சுப்மன் கில் படைத்த சாதனை யாதனில் : கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவருக்கு இன்றைய போட்டி ஐம்பதாவது ஒருநாள் போட்டியாகும். இந்த 50 வது போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் 50 ஆவது போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி மொத்தமாக 7 சதங்களை விளாசியுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக முதல் 50 போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை இந்த ஏழு சதங்களின் மூலம் அவர் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக எந்த ஒரு இந்திய வீரரும் 50 போட்டிகளில் ஏழு சதம் இதுவரை அடித்தது கிடையாது.
இதையும் படிங்க : 356 ரன்ஸ்.. இங்கிலாந்தை அடித்த கோலி, ஸ்ரேயாஸ், ராகுல்.. அம்லா, தவானை முந்திய கில் உலக சாதனை
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சற்று ஏமாற்றம் அளிக்கும் வகையில் சுப்மன் செயல்பட்டு வந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் பிரின்ஸ் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்த தொடர் முழுவதுமே அவரது ஆட்டம் பிரமாதமாகவே இருந்து வருகிறது.