
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு முழுவதுமாக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் கிரிக்கெட் வீரர்களுடன் இந்தியா களமிறங்கியது. ஆனால் முதல் போட்டியிலேயே ஜிம்பாப்வே அணியிடம் சொதப்பிய இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அப்போட்டி ஜூலை ஆறாம் தேதி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே கடினமாக போராடி 20 ஓவரில் 115/9 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக க்ளைவ் 29*, டியோன் மேயர்ஸ் 23, பெனட் 22 ரன்கள் எடுத்தனர்.
தோல்விக்கு காரணம்:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 116 ரன்களை துரத்திய இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே அணியின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த இந்தியா 19.5 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அவமானத் தோல்வியை பதிவு செய்தது.
இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 0, ருதுராஜ் 7, ரிங்கு 0, ரியான் பராக் 2, ஜுரேல் 6 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதிகபட்சமாக கேப்டன் கில் 31, கடைசி நேரத்தில் போராடிய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 27 ரன்கள் எடுத்தனர். மறுபுறம் டி20 உலக சாம்பியனான இந்தியாவை தோற்கடித்த ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா, சத்தாரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்நிலையில் பேட்டிங்கில் அவசரமாக விளையாடியதே தோல்விக்கான காரணம் என்று தெரிவித்த கேப்டன் சுப்மன் கில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டோம். ஆனால் களத்தில் எங்களை நாங்களே கீழே விட்டோம். நாங்கள் எங்கள் தரத்திற்கு தகுந்தார் போல் செயல்படவில்லை. பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவசரமாக செயல்பட்டது போல் தெரிந்தது. நாங்கள் நேரம் எடுத்து பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் செய்வது பற்றி பேசினோம்”
இதையும் படிங்க: 13 ரன்ஸ்.. உலக டி20 சாம்பியனை சாய்த்த ஜிம்பாப்வே.. இந்தியாவுக்கு எதிராக உலக சாதனை வெற்றி
“ஆனால் அது அந்த வழியில் செல்லவில்லை. 5 விக்கெட்டுகள் இழந்ததும் நான் கடைசி வரை நின்றிருந்தால் எங்களுக்கு நன்றாக அமைந்திருக்கும். ஆனால் நான் அவுட்டானதும் எஞ்சிய போட்டியும் முடிந்தது. கடைசியில் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் 115 ரன்கள் துரத்தும் போது உங்களுடைய பத்தாவது பேட்ஸ்மேன் களத்தில் போராடினால் நீங்கள் ஏதோ தவறு செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்” எனக் கூறினார்.