மழையால் இத்தனை மேட்ச் பாதிப்பது கடுப்பா இருக்கு – மழையை தடுக்க சுப்மன் கில் புதிய கோரிக்கை

shubman gill
- Advertisement -

நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்தது. ஆனால் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் அடுத்ததாக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதே மழையால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ள இந்தியா முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனால் நவம்பர் 30ஆம் தேதியன்று நடைபெறும் கடைசிப் போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய முடியும் என்ற பரிதாபத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

Seden-Park-Rain

- Advertisement -

முன்னதாக இந்த தொடரில் எந்த அணி வெல்கிறது என்பதை தாண்டி மழை வராமல் இருக்குமா என்பதே இருநாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. ஏனெனில் டி20 தொடரின் முதல் போட்டியையே ஒரு பந்து கூட விடாமல் மொத்தமாக காலி செய்த மழை 2வது போட்டியில் விருந்தினரை போல் சில நிமிடங்களில் வந்து போனாலும் 3வது போட்டியை யாருமே எதிர்பாராத வகையில் அபூர்வமாக வந்து சமன் செய்தது. இருப்பினும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் கருணை காட்டிய மழை நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் 29 ஓவர்களாக மாற்றப்பட்டும் நடத்த விடாமல் ரத்து செய்ய வைத்தது.

கடுப்பா இருக்கு:

இதனால் கடுப்பாகும் இந்திய ரசிகர்கள் இதற்கு இந்த சுற்றுப்பயணம் நடைபெறாமலே இருந்திருக்கலாம் என்றும் இது நியூசிலாந்து அல்ல மழைலாந்து என்றும் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அப்படி ரசிகர்களே கடுப்பாவதை போல் களமிறங்கி விளையாடும் வீரர்களும் ஏமாற்றத்துடனேயே காணப்படுகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய டி20 உலக கோப்பை உட்பட நிறைய போட்டிகள் மழையால் பாதிப்பது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் இந்திய வீரர் சுப்மன் கில் இதை தடுப்பதற்கு மூடப்பட்ட உள்ளரங்க மைதானங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Shikhar-Dhawan-and-Gill

முதல் போட்டியில் 50 ரன்கள் குவித்து 2வது போட்டியில் 45* ரன்களை விளாசி எப்படியாவது இந்த ஒருநாள் தொடரை இந்தியாவுக்கு வென்று கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய அவரை மழை தடுத்தது. அந்த ஏமாற்றத்துடன் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “உட்புற அரங்கங்களில் விளையாடுவது வாரியங்களால் எடுக்கப்படும் முடிவு. ஒரு வீரராகவும் ரசிகர்களாகவும் உள்ளேயும் வெளியேயும் சென்று பல போட்டிகள் மழையால் பாதிக்கப்படுவதை பார்ப்பது கடுப்பாகிறது”

- Advertisement -

“ஆனால் இது ஒரு பெரிய முடிவு என்பதால் நான் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் மூடப்பட்ட கூரை மைதானங்கள் கிரிக்கெட்டுக்கு நன்றாக இருக்கும். ஏனெனில் அந்த நிலைமை மிகுந்த விரக்தியை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக எவ்வளவு ஓவர்கள் என்று தெரியாமல் போவதால் நீங்கள் உங்களது ஆட்டத்தை திட்டமிட்டு விளையாட முடியவில்லை” என்று கூறினார்.

Shubman Gill 1

மேலும் இந்தியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் அவர் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “நான் வருங்காலத்தைப் பற்றி பெரிதாக எதிர்பார்க்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்துவதே தற்சமயத்தில் என்னுடைய இலக்காகும். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் பெரிய ரன்களை எடுத்து எனது அணியை வெற்றி பெற வைக்க உதவுகிறேன். மேலும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எப்போதும் எனது ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நான் பார்த்துக்கொள்கிறேன்”

“களத்தில் நீங்கள் இறங்கி விட்டால் உங்களது கவனம் பவுலர் வீசும் பந்தை எப்படி எதிர்கொண்டு ரன்களை குவிக்க வேண்டும் என்பதில் இருக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் இருக்கக் கூடாது” என்று கூறினார். முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய சுப்மன் கில் 2023 உலகக் கோப்பையில் இடம் பிடிக்கும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement