இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தற்போது ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரே துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்பதும் உறுதி. தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் மூன்றாவது போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார்.
அதேவேளையில் ரோஹித் சர்மா மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இணைந்து கேப்டனாகவும், துவக்க வீரராகவும் விளையாட இருக்கிறார். இந்த ஆண்டு முழுவதுமே சுப்மன் கில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 1764 ரன்களை 51 ரன்கள் சராசரியுடன் அவர் எடுத்துள்ளார். இதில் ஏழு சதங்கள் அடங்கும்.
அதிலும் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சதம் என இந்த ஆண்டு அவருக்கு அமர்க்களமாக இருந்துள்ளது. அதோடு ரோகித் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் விளையாடிய போது இவ்விருவரும் 19 போட்டிகளில் பங்கேற்று 1249 ரன்களை 69 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளனர். அதில் நான்கு முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துள்ளனர்.
இப்படி ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோரது பாட்னர்ஷிப் சிறப்பாக இருப்பதற்கும், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குவாலிட்டி சிறப்பாக இருப்பது குறித்தும் தற்போது தனது வெளிப்படையான கருத்தினை கில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்குமே சுதந்திரம் அளிக்கிறார். இந்திய அணியில் சீனியர் ஜூனியர்கள், ஜூனியர் வீரர்கள் என்றெல்லாம் பேதமே கிடையாது. அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.
அதோடு ஒரு கேப்டனாக அவர் எங்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் தான் எங்களிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை வெளிக்கொண்டு வருகிறது. அதோடு பயிற்சியாளர்களிடம் கூட வீரர்களை விட்டுக் கொடுக்காமல் பேசும் ரோஹித் அணியில் உள்ள வீரர்கள் அவர்களது சுதந்திரத்திற்கு ஏற்றார் போல் செயல்படும் உரிமையை வழங்கியுள்ளார். அந்த அளவிற்கு வீரர்களின் மீது ஒரு கேப்டனாக ரோகித் சர்மா முழு நம்பிக்கை வைத்துள்ளார். அவரது அந்த குவாலிட்டி தான் எங்களின் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என கில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஆஸி தொடரிலும் அசத்திட்டாரு.. 2023 உ.கோ அணியில் அஷ்வினுக்கு சான்ஸ் கிடைக்குமா – ரசிகர்கள் கேள்விக்கு ரோஹித் பதில்
இந்த ஆண்டு முழுவதுமே ஒருநாள் கிரிக்கெட்டில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் இதுவரை ஐந்து சதம் மற்றும் ஐந்து அரை சதங்களுடன் 72 ரன்கள் சராசரியுடன் 1230 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் அவரே உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை அடிப்பார் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் அவரை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.



