சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அக்டோபர் 2-ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவீந்திர ஜடேஜாவை பாக்க ஆச்சரியமாக இருக்கு : சுப்மன் கில்
இந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகிய வேளையில் அவருக்கு பதிலாக புதிய துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவ ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
குறிப்பாக 5 போட்டிகள் அந்த தொடரில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் என 86 ரன்கள் சராசரியுடன் 516 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் துணை கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் திறன் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : கடந்த இரண்டு ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா மிகச் சிறப்பான பார்மை வெளிக்காட்டி வருகிறார். குறிப்பாக பேட்டிங்கில் அவரது முன்னேற்றம் பெரியளவில் இந்திய அணிக்கு கை கொடுத்து வருகிறது. எந்த ஒரு எதிரணியாக இருந்தாலும் ஜடேஜா பின் வரிசையில் பேட்டிங் செய்வதை பார்த்து அச்சமடைகின்றனர். அந்த அளவிற்கு அவர் டெயில் எண்டர்களுடன் அற்புதமாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுகிறார்.
அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பான ஃபார்மில் இருப்பதினால் தான் ஆறாவது இடத்தில் முழுநேர பேட்ஸ்மேன் போல் விளையாடுகிறார். அவரது சிறப்பான பேட்டிங் ஃபார்ம் நமது அணியின் வெற்றிக்கும் உதவுகிறது. இந்திய அணி ஒரு சிக்கலான சூழலை சந்திக்கும் போது தனது அனுபவத்தின் மூலம் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறார்.
இதையும் படிங்க : இவ்ளோ காசா கேப்பீங்க.. ஏலத்தில் தமிழக வீரர் அஷ்வினை கண்டுகொள்ளாத அணிகள் – விவரம் இதோ
இத்தனை ஆண்டு காலம் தொடர்ச்சியாக அவர் இந்திய அணிக்காக பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்று வகையான துறையிலும் சிறந்து விளங்குவதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது என ரவீந்திர ஜடேஜாவை பாராட்டி சுப்மன் கில் பேசியது குறிப்பிடத்தக்கது.



