
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் துபாயில் தங்களுடைய போட்டிகளை விளையாடும் இந்தியா முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 229 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக தௌஹீத் ஹ்ரிடாய் 100 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு சுப்மன் கில் நிதானமாக விளையாடி சதத்தை அடித்து 101* ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் ரோஹித் சர்மா 41, விராட் கோலி 22, ராகுல் 41* ரன்கள் எடுத்து 46.3 ஓவரில் 231-4 ரன்களை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்கள்.
அதனால் இந்தியா இந்தத் தொடரில் வெற்றியுடன் துவக்கியுள்ளது. மறுபுறம் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தும் வங்கதேசம் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய துணை கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் இலக்கு 229 ரன்களாக இருந்தாலும் அதை சேசிங் செய்வதற்கு பிட்ச் கடினமாக இருந்ததாக கில் தெரிவித்துள்ளார். எனவே அதை துரத்துவதற்கு தேவையான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரிடம் திட்டங்கள் வகுத்ததாக கில் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இது நான் விளையாடிய திருப்த்திகரமான இன்னிங்ஸ்களில் ஒன்று. ஐசிசி தொடரில் இது என்னுடைய முதல் சதம். அந்த வகையில் நான் செயல்பட்ட விதத்தில் மிகவும் மகிழ்ச்சி. நானும் ரோஹித் பாயும் களத்திற்கு சென்ற போது பந்தை கட்டர் ஷாட் வாயிலாக அடிப்பது கடினம் என்று பேசினோம். ஏனெனில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகள் அடிப்பதற்கு நன்றாக வரவில்லை”
இதையும் படிங்க: 101 ரன்ஸ்.. போராடிய வங்கதேசத்தை சாய்த்த இந்தியா.. நங்கூரமாக வெற்றிக்கு வித்திட்ட கில்.. தவானை முந்தி சாதனை
“எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் இறங்கி சென்று வட்டத்திற்கு வெளியே அடிக்க முயற்சித்தேன். ஸ்பின்னர்கள் வந்த போது முன்னங்காலில் சிங்கிள் எடுப்பது கூட கடினம் என்று பேசினோம். அதனால் பின்னங்காலில் சிங்கிள்களை எடுக்க முயற்சித்தோம். நேராக அடிப்பதும் கடினமாக இருந்ததால் ஸ்ட்ரைக்கை மாற்ற முயற்சித்தோம். ஒரு கட்டத்தில் கடினமாக இருந்ததால் கடைசி வரை நின்று நான் விளையாட வேண்டும் என்று எனக்கு வெளியில் இருந்து மெசேஜ் வந்தது. முதல் சிக்ஸர் அடித்தது நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தது” என்று கூறினார்.