
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறுகிறது. துபாயில் நடைபெறும் அந்தப் போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாகக் கருதி அதில் தங்களுடைய திறமையால் வெற்றி பெறுவதற்காக ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள்.
அதனால் அந்தப் போட்டியில் அனல் பறக்கும் என்பதே இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளின் சிறப்பம்சமாகும். இருப்பினும் சமீப காலங்களில் பாகிஸ்தான் தடுமாற்றமாக விளையாடுவதால் இந்தியா அதிக வெற்றிகளைப் பெறுகிறது. அதனால் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் ஓவர்ரேட்டட் மற்றும் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதே தவிர தரமாக இல்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
ஒருதலைபட்சமாக இந்தியா வெல்லும் அளவுக்கு பாகிஸ்தான் போட்டியைக் கொடுப்பதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சமீப காலங்களில் தோற்றாலும் பாகிஸ்தான் அணியை தாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என இந்தியாவின் துணை கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். மேலும் பல கோடி மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் இப்போதும் உயர்தரமானது தான் என்று அவர் விமர்சனங்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் முதல் தனக்கென்று ஒரு சொந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. அவ்விரு அணிகள் மோதும் போது ஒவ்வொரு முறையும் ஆர்வம் மிகுந்த போட்டி இருக்கும். இந்தப் போட்டியைப் பார்த்து நிறைய மக்கள் மகிழ்ச்சியைப் பெற்றால் பின்னர் அதை நாம் ஓவர்ரேட்டட் அல்லது அண்டர்ரேட்டட் என்று சொல்வதற்கு நாம் யார்?”
“நாங்கள் களத்திற்கு சென்று கிரிக்கெட்டை விளையாடி எங்களுடைய அணியை வெற்றி பெற வைக்க முயற்சிக்கிறோம். இது பெரிய போட்டி. ஆனால் ஃபைனலில் எந்த அணிகள் மோதினாலும் அது தான் பெரிய போட்டியாகும். ஒருநாள் கிரிக்கெட்டில் நாங்கள் கொஞ்சம் நன்றாக விளையாடுகிறோம். பாகிஸ்தான் சமீபத்திய போட்டிகளில் தோல்வியை சந்தித்தது”
இதையும் படிங்க: 351 ரன்ஸ்.. ஆஸியை பந்தாடிய பென் டக்கெட் இரட்டை உலக சாதனை.. இங்கிலாந்து அணி 21 வருட உலக சாதனை
“அதற்காக நாங்கள் அவர்களை குறைந்த அணியாக சிந்திப்போம் என்று அர்த்தம் இல்லை” எனக் கூறினார். இந்த நிலையில் நியூசிலாந்திடம் தோற்றதால் செமி ஃபைனல் செல்லும் வாய்ப்பை தக்க வைக்க இந்தியாவுக்கு எதிராக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்குகிறது. மறுபுறம் வங்கதேசத்தை தோற்கடித்த இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்ய தயாராக உள்ளது.