நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்யாசத்தில் வென்றது. ஆனால் 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து 1 – 1* (3) என்ற கணக்கு தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 284/7 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேஎல் ராகுல் அபாரமான சதமடித்து 112*, கேப்டன் சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 25 ரன்களை கூட தாண்டவில்லை. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ்டியன் கிளார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய நியூஸிலாந்து 47.3 ஓவரிலேயே 286/3 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து பதிலடி:
அதிகபட்சமாக டேரில் மிட்சேல் சதமடித்து 131*, வில் எங் 87, கிளன் பிலிப்ஸ் 32* ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் இப்போட்டியில் முதல் 10 ஓவர்களில் இந்தியாவின் பவுலிங் நன்றாக இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ஆனால் மிடில் ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காததே இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் ஃபீல்டிங் துறையில் கேட்ச்கள் தவற விட்டால் பேட்டிங்கில் 300 ரன்கள் அடித்தாலும் வெற்றி பெற முடியாது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே தங்களது பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை என்று தெரிவிக்கும் கில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மிடில் ஓவர்களில் நாங்கள் எந்த விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை”
கில் வருத்தம்:
“உள்வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் அனுமதிக்கப்படும் சூழ்நிலையில் நீங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டால் பேட்டிங்கில் கூடுதலாக 15 – 20 ரன்கள் அடித்தாலும் வெற்றி பெறுவது கடினம். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கத் தவறினால் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது கடினம். அதுவும் இது போன்ற பிட்ச்சில் பார்ட்னர்ஷிப் அமைக்கப்படும் போது செட்டிலான பேட்ஸ்மேன் பெரிய ரன்கள் அடிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்”
இதையும் படிங்க: 131 ரன்ஸ்.. 8 வருடம் கழித்து இந்தியாவை சாய்த்த நியூஸி.. மாஸ் காட்டிய மிட்சேலை பாராட்டிய கோலி
“ஏனெனில் புதிதாக வரும் பேட்ஸ்மேன் எளிதாக சுதந்திரமாக ரன்கள் குவிப்பது சுலபமாக இருக்காது. முதல் 10 – 15 ஓவர்களில் பந்து எங்களுக்கு கொஞ்சம் சாதகமாக எதையாவது செய்தது. அதற்கு மேல் எதுவும் கிடைக்கவில்லை. எப்படி இருந்தாலும் நாங்கள் எங்களது பந்து வீச்சில் இன்னும் கொஞ்சம் தைரியத்துடன் செயல்பட வேண்டும். கடந்த போட்டியிலும் நாங்கள் சில வாய்ப்புகள் கிடைக்கும் தவற விட்டோம். எனவே ஃபீல்டிங் துறையிலும் நாங்கள் முன்னேற வேண்டும். அதில் வாய்ப்புகளை இருக்காவிட்டால் ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் எப்போதும் தோற்க வேண்டியது வரும்” என்று கூறினார்.



