
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையில் இரண்டாவது கோப்பையை வெல்லும் முனைப்புடன் குஜராத் ஐட்டம்ஸ் அணி விளையாட உள்ளது. இந்தியாவுக்காக 4 விதமான கிரிக்கெட்டிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டு வரும் கில் தன்னை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தி வருகிறார்.
எனவே அவரை குஜராத் அணி கடந்த வருடம் தங்களது புதிய கேப்டனாக நியமித்தது. அவரது தலைமையில் கடந்த வருடம் தடுமாற்றமாக விளையாடிய குஜராத் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் இம்முறை சிறப்பாக விளையாடி குஜராத் அணியை குறைந்தபட்சம் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்புடன் சுப்மன் கில் கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்நிலையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் தாம் விளையாடுவதற்கு காரணம் என்று கில் தெரிவித்துள்ளார். மேலும் மும்பையில் உள்ள பஞ்ச்குலா மைதானத்திற்கு சச்சின் டெண்டுல்கர், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் பயிற்சிக்கு வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அப்போது 7 – 8 வயதில் இருந்த தாம் சச்சினுக்கு எதிராக வலைப்பயிற்சியில் பவுலிங் செய்துள்ளதாகவும் கில் தெரிவித்துள்ளார்.
தமது தந்தை லக்விந்தர் சிங் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய ரசிகன் என்றும் தெரிவிக்கும் கில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பஞ்ச்குலாவில் இருக்கும் டவ் தேவி லால் மைதானத்தில் எனது தந்தையுடன் 3 – 4 போட்டிகளில் விளையாடியது நினைவிருக்கிறது. 2009 – 2010 ஐபிஎல் காலகட்டங்களில் மும்பை அணி வீரர்கள் அங்கே பயிற்சிக்கு வந்தனர்”
“அப்போது 7 – 8 வயதில் நான் இருந்தேன். அப்போது சச்சின் சார் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படமும் என்னிடம் இருக்கிறது. அவர்களுடைய பயிற்சியில் அவர்களுக்கு எதிராக நான் பந்துகளை வீசினேன். இது தான் ஐபிஎல் தொடரில் என்னுடைய ஆரம்பக்கட்ட நினைவுகளாகும். அப்போது பதற்றமாக இருந்தாலும் சச்சின் சார் பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும்”
இதையும் படிங்க: தோனி இருக்கும் வரை இந்தியாவின் எந்த மைதானத்திலும் இதை மாத்த முடியாது.. ஜஹீர் கான் வெளிப்படை
“அவர் தான் நான் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு காரணம். என்னுடைய தந்தை அவருடைய மிகப்பெரிய ரசிகர். அவருடைய பெரிய போஸ்டரை எங்களுடைய கிராமத்தில் நாங்கள் வைத்திருந்தோம்” என்று கூறினார். மேலும் வெவ்வேறு வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதே இம்முறை கேப்டனாக தனது வேலை என்றும் கில் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து குஜராத் தங்களது முதல் போட்டியில் பஞ்சாப்பை மார்ச் 25ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.