இங்கிலாந்து மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. 3 போட்டிகள் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கிறது. முன்னதாக அத்தொடரில் 3வது போட்டியில் 3வது நாளின் மாலையில் இங்கிலாந்து 2 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
அப்போது ஒரு ஓவரை குறைப்பதற்காக இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார். அதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் கில் சில மோசமான வார்த்தைகளைச் சொல்லி அவரிடம் வாக்குவாதம் செய்தார். அதுவே கடைசியில் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தங்களுக்கு கொடுத்ததாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.
இங்கிலாந்து செஞ்சது நேர்மையா:
அதனால் இங்கிலாந்தை தேவையின்றி வம்பிழுத்து இந்தியாவின் தோல்விக்கு காரணமான கில்லை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் ஜாக் கிராவ்லியிடம் வாக்குவாதம் செய்ததற்காக தன்னை திட்டுபவர்கள் இங்கிலாந்து நேர்மையின்றி வேண்டுமென்றே 90 நொடிகள் வீணடித்ததை நியாயப்படுத்துவார்களா? என்று கில் தெரிவித்துள்ளார். ஜாக் கிராவ்லியிடம் மோதியதற்காக தன்னை விமர்சனங்களுக்கு அவர் கொடுத்த பதிலடி பின்வருமாறு.
“நிறைய மக்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் ஒருமுறை நான் தெளிவுபடுத்துகிறேன். அன்றைய நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாட 7 நிமிடங்கள் மீதமிருந்தது. ஆனால் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் வெள்ளைக்கோட்டிற்கு 90 நொடிகள் தாமதமாக வந்தனர். 10, 20 அல்ல 90 நொடிகள் தாமதப்படுத்தினர். ஒருவேளை நாங்கள் அந்த சூழ்நிலையில் இருந்தாலும் குறைந்த ஓவர்களை எதிர்கொள்ளவே விரும்பியிருப்போம்”
கில் பதிலடி:
“ஆனால் அதைச் செய்வதற்கு ஒரு நடத்தை இருக்கிறது. உங்களுடைய உடலில் அடி வாங்கினால் மருத்துவர்கள் வந்து சோதிக்கலாம். அது நியாயமானது. ஆனால் வேண்டுமென்றே 90 நொடிகள் களத்திற்கு தாமதமாக வருவது கிரிக்கெட்டின் நேர்மைத்தன்மைக்கு உட்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதுவே நடக்கக்கூடாத அந்த விஷயங்களுக்கு வித்திட்டது. அப்படி நடந்து கொண்டதற்காக நானும் பெருமைப்படவில்லை”
இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தரை பார்த்த முதல் நாளே நான் சொல்லிட்டேன்.. அவர் இதுக்கு தகுதியானவர் – ரவி சாஸ்திரி பாராட்டு
“நாங்களும் வேண்டுமென்றே அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நீங்கள் விளையாடும் போது நிறைய உணர்வுகள் வெளிப்படும். அது போன்ற விஷயங்கள் நடப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்வுகள் உங்களைத் தாண்டி வந்து விடும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 4வது போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா மான்செஸ்டரில் களமிறங்க உள்ளது.



