இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த முதல் போட்டிக்காக தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் கொல்கத்தா சென்றடைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பலமான அணிகள் மோதும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
54 ரன்கள் அடித்தால் சாதனை உறுதி :
இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 54 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இந்த சுழற்சியில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரோகித் சர்மாவிற்கு அடுத்து புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்ட பிறகு அவரது ஆட்டம் அற்புதமாக இருந்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு சதங்களை அடித்த அவர் அந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார்.
அதுமட்டுமின்றி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்ற தொடரின் போதும் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இதுவரை இந்த 2025 – 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 946 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் மேலும் 54 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 1000 ரன்களை பூர்த்தி செய்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இந்த பட்டியலில் அடுத்த 4 இடங்களிலும் இந்திய வீரர்களே அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் வெளியேறும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிய கேப்டன் யார்? – வெளியான தகவல்
அதோடு ஒட்டுமொத்தமாகவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இதுவரை 2839 ரன்களை குவித்துள்ள அவர் மேலும் 161 ரன்களை அடிக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 3000 ரன்களை தொட்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.



