இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றதை அடுத்து ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை அவர் விளையாட நினைத்தாலும் அந்த தொடருக்குள் ரோகித் சர்மா 40 வயதை எட்டி விடுவார் என்பதனால் இந்திய அணியின் நிர்வாகமானது ரோகித் சர்மாவின் கேப்டன் பதவியை பறிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக மாறும் சுப்மன் கில் :
அந்த வகையில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை பெற்ற சுப்மன் கில் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக புதிய டி20 கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
அதேபோன்று எதிர்வரும் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அவருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சி அனுபவமும் வேண்டும் என்பதினால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போதே அவரை ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஏனெனில் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தாலும் நிர்வாகத்திற்கு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமிக்கவே விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே ரோஹித் சர்மாவிடம் பேசப்பட்டிருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதுமட்டும் இன்றி மூன்று வகையான பார்மெட்டிற்கும் ஒரே கேப்டன் என்கிற வழக்கமான முறையையும் நிர்வாகம் நடைமுறை படுத்த விரும்புவதாக தெரிகிறது. இதன் காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போது சுப்மன் கில் முழுநேர ஒருநாள் கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தொடர்ந்து இந்திய அணியில் விளையாடனும்னா இதை செய்யுங்க.. ரோஹித் சர்மா மற்றும் கோலிக்கு – பறந்த உத்தரவு
இந்திய அணியின் நீண்ட எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் சுப்மன் கில்லுக்கு இப்படி அடுத்தடுத்து தொடர்ச்சியான கேப்டன் பதவிகள் கிடைத்து வருவது விமர்சகர்கள் மத்தியில் சற்று விவாதத்தையும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.



