இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் துவங்கியுள்ளது. ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து லீட்ஸ் மைதானத்தில் பேட்டிங்கை துவங்கிய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் – ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆரம்பத்திலேயே நிதானமாக விளையாடி அசத்தினர்.
ஆரம்பகட்ட நேரங்களை சமாளித்து இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்த அந்த ஜோடி 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தது. அப்போது கேஎல் ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த அறிமுக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்ற போதிலும் மறுபுறம் ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி அரை சதத்தை அடித்தார்.
ஜெய்ஸ்வால் அபாரம்:
அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து கேப்டன் சுப்மன் கில் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடி அசத்தினார். 3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியாவை வலுப்படுத்தியது. அந்த ஜோடியில் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் தம்முடைய முதல் ஆட்டத்திலேயே சதத்தை அடித்த 5வது இந்திய வீரராக சாதனை படைத்து 101 ரன்கள் குவித்து அவுட்டானார்.
மேலும் லீட்ஸ் மைதானத்தில் சதத்தை அடித்த முதல் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்தார். அவருக்குப் பின் கேப்டன் கில் சிறப்பாக விளையாடி அரை சதத்தை அடித்தார். அவருடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து ரன்களை குவித்தார்.
கோலிக்குப்பின் சாதனை:
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியிலேயே சதத்தை அடித்தார். இதன் வாயிலாக தனது அறிமுக டெஸ்ட் இன்னிங்சிலேயே சதத்தை அடித்த இந்திய கேப்டன் என்ற விஜய் ஹசாரே (1951), சுனில் கவாஸ்கர் (1976), விராட் கோலி (2014) சாதனையை சுப்மன் கில் சமன் செய்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் பெரிய ரன்கள் குவிக்காத கில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே தகுதியற்றவர் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
இதையும் படிங்க: 1996 தாதா கங்குலி போல மாஸ் சதம்.. லீட்ஸ் மைதானத்தில் ஜெய்ஸ்வால் முதல் இந்தியராக வரலாற்று சாதனை
அப்படிப்பட்டவர்களுக்கு கேப்டனாக வந்ததும் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்துள்ள கில் நெத்தியடி பதிலடியைக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். மேலும் சச்சின் டெண்டுல்கர் (23 வருடம் 253 நாட்கள்), கபில் தேவ் (24 வருடம் 64 நாட்கள்) ஆகியோருக்கு பின் இளம் வயதில் (25 வருடம் 285 நாட்கள்) வெளிநாட்டு மண்ணில் சதத்தை அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் இப்பதிவிடும் போது இந்தியா 331/3 ரன்கள் எடுத்துள்ளது.



