இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார். கடைசியாக மான்செஸ்டர் நகரில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி 103 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்.
பும்ரா குறித்து நாளை முடிவு செய்வோம் : சுப்மன் கில்
இப்படி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் பும்ரா வழங்குவது இதுவே முதல் முறை. கடந்த போட்டியில் அவரது பவுலிங் சற்று சறுக்கலை சந்தித்தது. ஆனாலும் அவரது பங்கு இந்திய அணியின் வெற்றிக்கு அவசியமானது என்பதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாக பணிச்சுமை காரணமாக பும்ரா இந்த தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளில் ஏற்கனவே பும்ரா மூன்று போட்டிகளில் விளையாடி விட்டதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே கடந்த சில நாட்களாக அதிகளவில் விவாதிக்கப்படும் விடயமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நாளை ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கும் ஐந்தாவது போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பும்ரா குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
பும்ரா கடைசி போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதற்கான முடிவை நாங்கள் நாளை தான் எடுக்க உள்ளோம். ஆடுகளம் பசுமையாக உள்ளது. எனவே நாளை பார்ப்போம் என பதிலளித்துள்ளார். இதன்மூலம் ஒருவேளை நிச்சயம் இந்த போட்டிக்கு பும்ரா அவசியம் தேவைப்பட்டால் அவர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனாலும் அந்த ரிஸ்க்கை இந்திய அணி எடுக்குமா? என்பது சந்தேகம் தான்.
இதையும் படிங்க : முக்கியமான இந்த கடைசி டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் இதை செய்வார் – பார்த்திவ் படேல் நம்பிக்கை
ஒருவேளை கடைசி போட்டியின் போது அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டால் அது மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு தரும் என்பதனால் அந்த விடயத்தில் நிர்வாகம் அவசரப்படாது என்றும் தெரிகிறது. ஏற்கனவே இந்திய மருத்துவக்குழு வெளியிட்டிருந்த தகவலின் படி : பும்ரா கடைசிப்போட்டியில் விளையாட மாட்டார் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



