ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
தோனி, ஸ்ரீகாந்த் ஆகியோரது சாதனையை சமன் செய்த சுப்மன் கில் :
அந்த வகையில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் 102 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 112 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அதோடு இந்த தொடரில் அவரது ஆட்டம் பிரமாதமாக இருந்ததால் அவருக்கே தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் அடித்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை சுப்மன் கில் நிகழ்த்தியிருந்த வேளையில் ஏழாவது இந்திய வீரராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய சாதனை ஒன்றிணையும் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் கடந்த அவர் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலுமே அரைசதம் அடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : தாதா கங்குலியை தாண்டி தல தோனியை சமன் செய்த கிங் விராட் கோலி – விவரம் இதோ
இவருக்கு முன்னதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், திலீப் வெங்சர்க்கார், அசாருதீன், மகேந்திர சிங் தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோர் அடித்திருந்த வேளையில் தற்போது ஏழாவது இந்திய வீரராக இந்த சாதனையில் சுப்மன் கில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



