இந்திய கிரிக்கெட்டில் இன்னும் ஓரிரு வருடங்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்கு இளம் வீரர்கள் இப்போதே போட்டியிட்டு வருகின்றனர். அதில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வருங்காலங்களில் விராட், ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்புவார்கள் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த மூவரில் தற்போது ருதுராஜ் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார். ஜெய்ஸ்வால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நிலையான துவக்க வீரராக வாய்ப்பு பெற்று அசத்தி வருகிறார். ஆனால் சுப்மன் கில் 3 வகையான கிரிக்கெட்டிலும் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு நன்றாக பேட்டிங் செய்துள்ளார்.
வருங்கால கேப்டன் சுப்மன் கில்:
அதனால் அவரை ஆல் ஃபார்மட் பிளேயராக கருதுவதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக இந்தியாவின் வருங்கால கேப்டனாக சுப்மன் கில்லை வளர்ப்பதற்காக இப்போதே பிசிசிஐ அவரை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. இருப்பினும் அந்த முடிவு பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் சுப்மன் கில் வருங்கால இந்திய டி20 அணியின் கேப்டனாக வருவார் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக தற்போது குஜராத் அணியை தலைமை தாங்கி வரும் சுப்மன் கில் ஐபிஎல் கோப்பையை வென்றால் சூரியகுமாருக்கு பின் இந்திய டி20 அணிக்கு கேப்டனாகும் வாய்ப்புள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ரெய்னா நம்பிக்கை:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் சூப்பர் ஸ்டார். தற்போது அவர் துணை கேப்டனாக இருக்கிறார். யாரோ ஒருவர் அவரைப்பற்றி கேப்டனாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதே அதற்கான அர்த்தமாகும். ஒருவேளை அவர் நன்றாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வென்றால் சுப்மன் கில் வருங்காலமாக (கேப்டனாக) இருப்பார். அவர் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராகவும் இருக்கலாம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: வங்கதேசத்திடம் இந்த தப்பை செஞ்சா இந்தியா சொந்த மண்ணிலேயே ஜெய்ப்பது கஷ்டம்.. எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்
அவருடைய இந்த கருத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ருதுராஜ், ஜெய்ஸ்வாலை விட சுப்மன் கில் சுமாராகவே செயல்பட்டுள்ளார். அதையும் தாண்டி பிசிசிஐ அவரை துணைக் கேப்டனாக நியமித்துள்ளது. எனவே ஐபிஎல் கோப்பையை வென்று விட்டால் அதையே காரணமாக வைத்து அவரை பிசிசிஐ இந்தியாவின் டி20 கேப்டனாக அறிவித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.



