
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த ஊரில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வென்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அக்டோபர் 10ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.
அந்தப் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி பெரிய ரன்கள் குவிப்பது அவசியமாகிறது. ஏனெனில் டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் கிளாஸ் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று கருதிய இந்திய அணி அவரை கடந்த இங்கிலாந்து தொடரின் முதல் போட்டியிலேயே அறிமுகப்படுத்தியது.
அறிமுகப் போட்டியிலேயே பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய அவரை கருண் நாயருக்காக இந்திய அணி பெஞ்சில் அமர வைத்தது. இருப்பினும் கடைசி 2 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற சுதர்சன் 4 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியிலும் பெரிய ரன்கள் அடிக்கத் தவறிய அவருக்கு போட்டியாக துருவ் ஜுரேல், தேவ்தூத் படிக்கல் தயாராக இருக்கின்றனர்.
எனவே சுதர்சன் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள ரன்கள் குவிப்பது அவசியம் என்று துணைப் பயிற்சியாளர் ரியன் டஸ்சேட் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது இடத்தில் நீண்ட காலம் சாய் சுதர்சன் அசத்துவார் என்று தாம் நம்புவதாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கும் இது பற்று பேசியது பின்வருமாறு.
“சுதர்சன் சுமாரான ஃபார்மில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முதல் போட்டியில் அவருக்கு ஒரு இன்னிங்ஸ் மட்டுமே கிடைத்தது. இங்கிலாந்தில் ஓவல் போட்டியில் பந்து ஸ்விங்கான சமயத்தில் அவர் முக்கியமான 40 ரன்கள் அடித்தார். அதற்கு முன் மான்செஸ்டர் போட்டியில் அவர் அரை சதத்தை அடித்தார். எனவே அனைத்து போட்டியிலும் அனைவராலும் ஸ்கோர் அடிக்க முடியாது”
இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ: 102/6 டூ 251.. ரிச்சா கோஸ் உலக சாதனை.. தெ.ஆ’வை திருப்பி அடித்த இந்தியா
“சில இளம் வீரர்களுக்கு தங்களுடைய ஆட்டத்தை கண்டறிவதற்கு போதுமான வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் அந்த வீரரின் திறமையைப் பார்க்க வேண்டுமே தவிர 1, 2, 3 அல்லது 4 போட்டிகளில் வெளிப்படுத்திய ஆட்டத்தைப் பார்க்கக்கூடாது. ஒருவருக்கு 7 – 8 தொடர்ச்சியான வாய்ப்புகளைக் கொடுத்து பின்னர் உட்கார்ந்து எங்கே முன்னேறலாம் என்பதைக் கண்டறிய வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமையில் இந்தியாவுக்காக சுதர்சன் நீண்ட காலம் 3வது இடத்தில் விளையாடுவதற்கு சரியானவராக எங்களுக்குத் தெரிகிறார்” என்று கூறினார்.