இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.
ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தொடர்ந்து 11 வெற்றிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. அடுத்து நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடினார்.
ரோஹித்துக்கு டாட்டா:
அதனால் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற அவரது தலைமையில் இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்திருந்தது. எனவே 2027 உலகக் கோப்பையில் ரோகித் தலைமையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவரால் 40 வயதில் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.
எனவே இப்போதே அவரை கேப்டன் பதவியிலிருந்து கழற்றி விட்டுள்ள பிசிசிஐ, கௌதம் கம்பீர், அஜித் அகர்கர் சுப்மன் கில்லை புதிய கேப்டனாக தேர்வு செய்துள்ளது. மறுபுறம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சாதாரண வீரர்களாக மட்டுமே விளையாட தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் 2027 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் 100% விளையாடுவார்கள் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது.
ஜடேஜாவுக்கு மொத்தமாக டாட்டா:
இதற்கிடையே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்ல உதவிய ரவீந்திர ஜடேஜா மொத்தமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். மொத்தத்தில் ஆஸ்திரேலிய தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி ஆகியோரும் ஒருநாள் அணியில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விராட், ரோஹித், அஸ்வினை மிஸ் பண்றேன்.. இப்போல்லாம் நான் பொறுப்புடன் ஆட அவங்க 2 பேர் காரணம்.. ராகுல் பேட்டி
2025 ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி விபரம்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), அக்சர் பட்டேல், கேஎல் ராகுல் (கீப்பர்), நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், துருவ் ஜுரேல் (கீப்பர்), ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், யசஸ்வி ஜெய்ஸ்வால்



