இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸ் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 471, 364 ரன்களை அடித்த போதிலும் சிறப்பாக ஃபினிஷிங் செய்ய தவறியது.
அதே போல ஃபீல்டிங் துறையில் ஜெய்ஸ்வால், ஜடேஜா ஆகியோர் கேட்சுகளை தவற விட்டனர். மேலும் பவுலிங் துறையில் முதல் இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். ஆனால் மற்ற பவுலர்கள் அவரில் பாதியளவு கூட இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுக்கவில்லை. அதனால் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்த இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்து எளிதாக வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் மட்டுமல்ல:
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு ஜெய்ஸ்வால் தவற விட்ட கேட்ச் மட்டும் காரணம் கிடையாது என்று கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இது சிறப்பான டெஸ்ட் போட்டி என்று நினைக்கிறேன். நாங்கள் வெற்றி பெறுவதற்கான எங்களுடைய வாய்ப்பைக் கொண்டிருந்தோம். ஆனால் கேட்ச்களை தவற விட்ட எங்களுக்கு லோயர் ஆர்டர் பேட்டிங் போதுமான அளவு பங்காற்றவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக எங்களுடைய அணி ஆட்டத்திற்காக பெருமையடைகிறேன். நேற்று 430 ரன்களை அடித்து டிக்ளேர் செய்யலாம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்”
மிஸ்ஸான வெற்றி:
“துரதிஷ்டவசமாக எங்களுடைய கடைசி 6 விக்கெட்டுகள் 20 – 25 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அது நல்ல அறிகுறி கிடையாது. இன்று இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் விஷயங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை. பேட்டிங் சரிவு பற்றி நாங்கள் பேசி வருகிறோம். அது அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் சரி செய்ய வேண்டிய முக்கியமான விஷயமாகும்”
இதையும் படிங்க: 2 சொதப்பலால் இந்தியா 148 வருட வரலாறு காணாத மோசமான உலக சாதனை தோல்வி.. இங்கிலாந்து வெற்றி
“ஆம் லீட்ஸ் போன்ற பிட்ச்சில் விக்கெட்டுகள் எளிதாக கிடைக்காது. ஆனால் அங்கே நாங்கள் சில எளிதான கேட்ச்களை தவற விட்டோம். எங்களுடைய அணி மிகவும் இளமையானது. எனவே அடுத்தப் போட்டிகளில் அந்த விஷயங்களில் கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து முன்னேறுவோம் என்று நம்புகிறேன். பவுலிங் துறையில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம்” என்று கூறினார்.



