இந்திய அணியின் இடம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது அந்த டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த சில மாதங்களாகவே தற்போது முறையான பயிற்சி எடுத்து வருகிறார். இலங்கை தொடரில் விளையாட முடியாத அவர் தற்போது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் இணைய இருக்கிறார். செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் அவர் இணைய உள்ளார்.

இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்ததும் மிகப்பெரிய இரண்டு தொடர்களை அவர் சந்திக்க இருக்கிறார். ஒன்று ஐபிஎல் தொடர் அதனைத் தொடர்ந்து உலக கோப்பை டி20 தொடர் இந்த இரண்டு தொடர்களிலும் அவர் அணியில் முக்கிய வீரராக திகழ்வார். கடந்த நான்கு மாதங்களாக ஆகவே தான் கடினமாக பயிற்சி செய்து வருவதாகவும், இந்த ஓய்வு நாட்களில் கூட தான் பயிற்சியை மட்டுமே மேற்கொண்டதாகவும் விரைவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
எனக்கு இது சரியான வாய்ப்பு. காயத்திற்கு பிறகு நான் இப்போது திரும்பி வந்து ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் விளையாட உள்ளேன். இந்த இரண்டு மிகப்பெரிய தொடர்களும் ஒரு கிரிக்கெட்டராக எனக்கு மிகவும் முக்கியம். எப்போதுமே நாம் வெற்றி பெறும் அணியில் இருக்க வேண்டும் என்ற கனவு நம் அனைவரிடமும் இருக்கும். அந்த வகையில் தற்போது கடந்த நான்கு மாதங்களாக நான் என்னுடைய மனநிலையை ஒருநிலைப்படுத்தி கடினமாக உழைத்து வருகிறேன்.

நிச்சயம் என்னுடைய பயிற்சி எனக்கு வெற்றியை தரும். எதிர்வரும் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை டி20 தொடர்களில் எனது அணியின் வெற்றிக்காக நான் முக்கிய பங்களிப்பை தருவேன் இது மட்டுமே தற்போது என்னுடைய இலக்காக இருக்கிறது. அதுவரை நான் ஓய்வு எடுப்பது என்ற பேச்சுக்கே இடம்கொடுக்க மாட்டேன். அதேபோன்று என்னுடைய இடத்தை பிடிக்க வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் யாருடனும் என்னை ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே என்னுடைய ஆட்டம் சிறப்பாக அமைந்து இருக்கிறது. அதனை அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறேன். நிச்சயம் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை இனிவரும் தொடர்களில் கொண்டு வந்து நான் சார்ந்திருக்கும் அணிக்கு வெற்றியை தேடித் தரவேண்டும். இது மட்டுமே என்னுடைய தற்போதைய மன நிலையாக உள்ளது என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



