நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு பரிதாபமாக வெளியேறியது. இதனை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. 3 டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி இன்றும், நாளையும் கலந்து ஆலோசித்து நாளை மறுதினம் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் இந்திய அணியில் ஆடுவதற்கு தயாராக உள்ளேன்.
உடல் தகுதி மற்றும் மன அளவிலும் நான் இந்திய அணிக்காக ஆட தயாராக இருக்கிறேன். மேலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் நான் உறுதி அளிக்கிறேன். நெருக்கடியான நேரங்களில் எனது ஆட்டம் இந்திய அணிக்கு நிச்சயம் உதவும். ஒருவேளை அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த தொடரில் மிகச் சிறப்பாக என் திறமையை வெளிப்படுத்துவேன் என்று ஐயர் கூறினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமான ஐயர். அதன் பிறகு ஒரு சில தொடர்களில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டது அதன் பிறகு அவர் தொடர்ந்து அணியில் மறுக்கப்பட்டு வருகிறார். இருப்பினும் ஐயரின் திறமையைக் கண்ட பலர் இந்தியாவின் 4-வது இடத்திற்கு சரியான வீரராக இவரே இருப்பார் என்றும் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.



