
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 33 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களிடம் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் தங்களது முதலிடத்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேவேளையில் சன் ரைசர்ஸ் அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 என்று அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே அடிக்க 33 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது,
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது : இந்த போட்டியில் இலக்கு சற்று அதிகமாக இருந்ததாக நினைக்கிறேன். ஏனெனில் போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் நிறைய எளிதான கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டு விட்டோம்.
அந்த கேட்ச்களை மட்டும் சரியான நேரத்தில் பிடித்திருந்தால் நிச்சயம் 30 முதல் 40 ரன்கள் வரை இலக்கு குறைந்திருக்கும். இந்த மைதானத்தில் பந்து சற்று நின்று வந்ததால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது சற்று கடினமாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் பீல்டிங், பௌலிங் மற்றும் பேட்டிங் என மூன்று துறையிலும் பின்னடைவை சந்தித்ததாக உணர்கிறேன்.
இதையும் படிங்க : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான இந்த அசத்தலான வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி
இந்த தொடரின் ஆரம்பத்தில் 6 வெற்றிகளுடன் பிரமாதமாக துவங்கிய நாங்கள் அதை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அடுத்தடுத்து தோல்விகள் தற்போது கிடைத்துள்ளன. இந்த தோல்விகளில் இருந்து செய்ய வேண்டிய மாற்றங்களை சரியாக செய்து மீண்டும் வலிமையாக திரும்புவோம் என்று நம்புவதாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.