ஸ்பின் சரிதான், டி20 உலககோப்பையில் விளையாட பாஸ்ட் பவுலிங்கில் முன்னேற்றம் தேவை – ஷ்ரேயஸ் ஐயருக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை

Shreyas-iyer
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிப்பதால் எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே சொந்த மண்ணில் கோப்பையை வென்று தலை நிமிர்ந்து நடக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா உள்ளது. இந்தத் தொடரில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்கள் காயம் மற்றும் ஓய்வு காரணமாக இல்லாததால் அவர்களின் இடத்தில் இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

Shreyas

அதில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இல்லாததால் முக்கியமான 3-வது பேட்டிங் இடத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி வருகிறார். அப்படிப்பட்ட இந்த பொன்னான வாய்ப்பில் அற்புதமாக பேட்டிங் செய்து கச்சிதமாக பயன்படுத்த வேண்டிய அவர் இது வரை பங்கேற்ற 3 போட்டிகளில் 36 (26), 40 (35), 14 (11) என நல்ல ரன்களை எடுத்தாலும் கழற்றி விட முடியாது என்று தேர்வு குழுவினர் தயங்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

- Advertisement -

பிடித்தது ஸ்பின்:
பொதுவாகவே இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை இயற்கையாகவே சிறப்பாக எதிர் கொள்வார்கள் என்ற சூழ்நிலையில் இவரும் இந்தத் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை சேர்க்கிறார். ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு இந்தத் தொடர் மட்டுமல்லாது சமீபத்திய ஐபிஎல் தொடரிலும் சற்று தடுமாற்றத்துடனேயே பேட்டிங் செய்தார். ஆனால் இந்தியா போன்ற நம்பர் ஒன் அணியில் ஒரு இடத்திற்கு 3 – 4 பேர் கடும் போட்டியிடும் நிலையில் அனைத்து சூழ்நிலைகளிலும் சுழல் மற்றும் வேகம் என அனைத்துவிதமான பந்துகளையும் சிறப்பாக எதிர்கொண்டால் தான் நிலையான இடத்தை பிடிக்க முடியும்.

Shreyas

அதுவும் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தேவையான தரமான வீரர்களை தேர்வு செய்ய இந்திய நிர்வாகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய மைதானங்களில் காலம் காலமாக இயற்கையாகவே காணப்படும் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியன வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தை கொடுக்கும். எனவே அங்கு வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களுக்கே வரும் டி20 உலக கோப்பையில் அதிக வாய்ப்பு கிடைக்க உள்ளது.

- Advertisement -

முன்னேற்றம் தேவை:
அத்துடன் சூழ்நிலையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பும் போது நிச்சயமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். எனவே சீக்கிரமாக வேகப்பந்து வீச்சையும் திறம்பட எதிர்கொள்ளும் திறமையை கற்றுக்கொள்ளாவிடில் இந்திய அணியில் நீடித்திருக்க முடியாது என்றும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.

Wasim-Jaffer-and-Shreyas-Iyer

“3-வது இடத்தில் பேட்டிங் செய்யும் ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ஓவர்கள் விளையாடுவார்கள் என்பதால் அவர்கள் மீது எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். கடைசியாக நடந்த போட்டியில் நல்ல ஓபனிங் பார்ட்னர்ஷிப்புக்கு பின் களமிறங்கிய அவர் நிறைய அதிரடியான ஷாட்டுகள் விளையாடி அந்த தொடக்கத்தை அப்படியே எடுத்துச் சென்று 200 – 300 ரன்களை குவிக்க முயற்சிக்க தடுமாறினார். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறும் அவர் அதில் சற்று முன்னேற்றமடைய வேண்டும். ஏனெனில் அவருக்கு எதிரணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுகிறார்கள்”

- Advertisement -

“டி20 உலகக் கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் இருக்கும் என்பதாலும் அங்கு உள்ள மைதானங்கள் பெரிதாக இருக்கும் என்பதாலும் ஸ்கொயர் திசையில் ரன்கள் அடிப்பது சுலபமான காரியமல்ல. எனவே அவர் அந்த அம்சத்தில் கவனத்தைச் செலுத்தி முன்னேற வேண்டியுள்ளது. அதனால் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி போன்றவர்கள் அணிக்கு திரும்பினால் அவரின் இடம் பறிபோய்விடும். ஆனால் தற்போதைய நிலைமையில் அவர் அடுத்த 2 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்காக போராட வேண்டும்” என்று கூறினார்.

shreyas 1

அவர் கூறுவது போல ஷார்ட் பிட்ச் பந்துகளை போட்டாலும் வேகப்பந்து வீச்சாளர்களை பந்தாடும் திறமை பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்பினால் ஷ்ரேயஸ் ஐயரின் வாய்ப்பு தாமாகவே பறிபோய்விடும். எனவே வரும் காலங்களில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட நுணுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஸ்ரேயாஸ் அய்யர் தள்ளப்பட்டுள்ளார்.

Advertisement