
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் இந்த மாபெரும் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணியானது இம்முறை நடப்பு சாம்பியனாக இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது.
அப்படி வெளியான அறிவிப்பின் படி சூரியகுமார் யாதவின் தலைமையின் கீழ் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீரரான திலக் வர்மா தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரின் ஒரு போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை தவறவிட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த காயம் குணமடைய குறைந்தது நான்கு வாரங்கள் வரை ஆகும் என்பதனால் டி20 உலக கோப்பை தொடரையும் அவர் தவறவிட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அப்படி ஒருவேளை திலக் வர்மா டி20 உலககோப்பை தொடரிலிருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இடம்பெறப்போகும் வீரர் யார்? என்ற எதிர்பார்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திலக் வர்மா ஒருவேளை இந்த உலக கோப்பை அணியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது இடம் நேரடியாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு தான் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டி20 போட்டியில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் களமிறங்க மிகப் பொருத்தமாக இருக்கக்கூடியவர் ஷ்ரேயாஸ் ஐயர்தான். ஏற்கனவே ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும், நான்காவது இடத்தில் விளையாடும் வீரராக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் போட்டிகளின் போதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் இடதுகை பந்துவீச்சாளராக மாபெரும் சாதனையை சமன் செய்து அசத்திய – மிட்சல் ஸ்டார்க்
அதனால் இந்த வாய்ப்பினை அவருக்கு வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரர் 7 முதல் 15 ஓவர்கள் வரை விளையாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்படி இடைப்பட்ட ஓவர்களில் சுழற்பந்து வீச்சு தாக்குதலை சமாளித்து விளையாடும் அற்புதமான வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் பார்க்கப்படுவதால் அவரே திலக் வர்மாவிற்கு மாற்று வீரராக விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.