சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. மெல்போர்ன் நகரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்தும் போது கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூர்யாகுமார் என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்றதால் கதை முடிந்ததாக அனைவரும் நினைத்த போது பாண்டியாவுடன் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி முழு மூச்சை கொடுத்து காப்பாற்றினார்.

இருப்பினும் கடைசி ஓவரில் பாண்டியா 40 (37) ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட பரபரப்பில் பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் பதற்றத்தில் அவுட்டானது மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அப்போது கூலாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் அதே ஒய்ட் வலையில் சிக்காமல் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார். அப்போட்டியில் ஒரு கட்டத்தில் அனைவரும் நம்பிக்கை இழந்த போதும் நம்பிக்கை இழக்காமல் கடைசி வரை போராடிய விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்து வரலாற்றில் காலத்திற்கும் மறக்க முடியாத மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி 100க்கு 100% பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார் என்றே கூறலாம்.
கஷ்டமா இருக்கு:
முன்னதாக அறிமுகமானது முதல் கடந்த 15 வருடங்களில் இப்படி ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ள விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த போது ரிக்கி பாண்டிங் முதல் இதே பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் வரை நிறைய வெளிநாட்டவர்கள் முழுமையான ஆதரவு கொடுத்தனர். ஆனால் இன்று வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்ததால் ஹீரோவாக கொண்டாடும் இதே இந்தியாவில் இதற்கு முன் அவர் பெற்றுக் கொடுத்த மகத்தான வெற்றிகளை மறந்த கௌதம் கம்பீர், கபில் தேவ், அஜய் ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், வாசிம் ஜாபர் போன்ற சில முன்னாள் வீரர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை அணியிலிருந்து நீக்குமாறு மனசாட்சியின்றி விமர்சித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் கோபித்துக் கொள்ளாமல் சமீபத்திய ஆசிய கோப்பையை சதமடித்து பார்முக்கு திரும்பிய விராட் கோலி தற்போது வரலாற்று வெற்றியை பதிவு செய்து அதே பழைய பன்னீர்செல்வமாக முழு பார்முக்கு திரும்பி தன்னைக் கிங் என்பதை நிரூபித்து தன்னை அணியிலிருந்து நீக்குமாறு பேசியது அதே வாய்களை பாராட்ட வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது விராட் கோலியை அனைவரும் கொண்டாடும் போது தமக்கு மட்டும் மோசமான காலத்தில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது நினைவுக்கு வருவதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரெட் லீ வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக இந்தியாவில் இருந்தே அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது தம்மை அதிர்ச்சியடைய வைத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி என்ற திறமையான ஒருவர் விமர்சனங்கள் என்ற பெயரில் தாக்கப்பட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. என்னை பொருத்தவரை விராட் கோலியை தாக்கியவர்கள் அவரது சாதனைகள் மற்றும் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவரது செயல்பாடுகளை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்”

“பொதுவாக விளையாட்டில் நீங்கள் அரை சதத்தை எட்டமுடியாத நேரமும் சதங்களை எட்ட முடியாத சூழ்நிலைகளும் இருப்பது ஒரு அங்கமாகும். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆரம்ப முதல் இப்போது வரை விராட் கோலி என்பவர் இந்த விளையாட்டின் ஜாம்பவான் ஆவார். அதனாலேயே அவரை போன்ற மகத்தான கிரிக்கெட் வீரர்களை அதிக நாட்கள் உங்களால் கீழே தள்ள முடியாது” என்று கூறினார். ஆனால் அசாத்தியமான வெற்றியை இப்போதும் கூட விராட் கோலி பெற்றுக் கொடுத்த பின்பும் சில முன்னாள் வீரர்கள் அவரது பெயரை குறிப்பிடாமல் இந்தியா மட்டும் தாமாக வென்றதாக பாராட்டுவது வேதனைக்குரியது.



