
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியான நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திற்கு பிறகு இன்னும் இந்திய அணிக்காக விளையாட வில்லை. அவர் விளையாடி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியதால் பிசிசிஐ அவரை ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கியது. இதனால் தோனி மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவது கடினம் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில் தோனியின் ரசிகர்கள் அவர் எப்பொழுது மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு தற்போது வாய்ப்பே இல்லை என்று தெரியவந்துள்ளது. தோனியின் கடைசி வாய்ப்பாக ஐபிஎல் தொடர் கருதப்பட்டது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்று ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர். மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் தோனிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது.
ஏற்கனவே இந்திய அணி வீரர்களான கவாஸ்கர், சேவாக், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ஆகியோர் தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் தோனிக்கு சப்போர்ட் செய்து வாசிம் ஜாபர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் என நாசர் உசேன் ஆகியோர் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர் தோனியை சீண்டும் விதமாக ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதுகுறித்து அவர் கூறியதாவது : தோனியிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. அவரின் திறமை காரணமாக இந்திய அணிக்கு ஏகப்பட்ட வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். எனவே அவர் கிரிக்கெட்டிலிருந்து தகுந்த மரியாதையுடன் ஓய்வு பெறவேண்டும். ஆனால் அவர் இன்னும் ஏன் ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை என்று எனக்கு புரியவில்லை மேலும் அவர் உலக கோப்பை முடிந்ததுமே ஓய்வு அறிவிப்பினை அறிவித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை வெல்ல வைக்க முடியவில்லை அப்போதே அவர் ஓய்வு பெற்று இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அதற்கு பின்னரும் அவர் ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. உலகக்கோப்பை முடிந்த பின்னாவது கடைசியாக வழியனுப்புதல் போட்டியை ஆடிவிட்டு கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லி இருந்தால் மரியாதையுடன் நன்றாக அமைந்திருக்கும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.